குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது சாலையோரம் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது லாரி மோதல்:அக்கரை அருகே இன்று காலை விபத்து
துரைப்பாக்கம்: அக்கரை அருகே இன்று காலை குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பிரேக் போட்டபோது சாலையோரம் நிறுத்தியிருந்த ஆட்டோ மீது லாரி மோதியது. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக இன்று காலை அக்கரை பகுதிக்கு ஒரு மணல் லாரி சென்று கொண்டிருந்தது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இந்திரா நகரை சேர்ந்த டிரைவர் பிரேம்குமார் (26) என்பவர், லாரியை ஓட்டி சென்றார். ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, உள்புற சாலையில் இருந்து திடீரென ஒரு பைக் வந்தது.
அதன்மீது லாரி மோதாமல் இருக்க, டிரைவர் பிரேம்குமார் பிரேக் பிடித்துள்ளார். இதில் நிலைதடுமாறிய லாரி, எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் அடியில் ஆட்டோ சிக்கி சேதமடைந்தது. மேலும், லாரியும் நொறுங்கியது. இந்த சம்பவத்தில் ஆட்டோவில் இருந்த 3 பேர் இறங்கி சாலையோரமாக பேசி கொண்டிருந்ததால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும், சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து மணல் சிதறியது.
இதனால் இசிஆர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். லாரி மற்றும் மணலை ஜேசிபி இயந்திரம் மூலமாக அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
