வெளிநாடு வாழ் தமிழர்களின் ஓட்டுக்கள் என்னவாகும்? 2002ம் ஆண்டு பட்டியலை ஒப்பிடுவது ஏன்? பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்வி
* எஸ்ஐஆரில் பல்வேறு கெடுபிடிகள், சிறிய காரணங்களால் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள், பறிபோகும் வாக்கு உரிமை
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இதற்கான பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். இந்த படிவத்தை தவறாக பூர்த்தி செய்தால் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாது. முகவரி மாற்றம் போன்ற பணிகளுக்கு 2002 பட்டியலில் பெயர் இருந்தால் அதை ஆதாரத்தை கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
2002ம் ஆண்டு இருந்த தொகுதி வேறு, வார்டு வேறு. தற்போது மறுவரையறை செய்யப்பட்டு எல்லாம் மாறி இருக்கிறது. இதனால், வாக்காளர்கள் 2002ம் ஆண்டு எந்த தொகுதியில் இருந்தோம், வார்டு எண் என்ன? பாகம் நம்பர் என்ன? என்று தெரியாமல் முழிக்கின்றனர். இதனால், கிட்டத்திட்ட பல லட்சம் முதல் கோடிக்கணக்கான வாக்குகள் பறிபோகும் அபாயம் உள்ளது. இந்த எஸ்.ஐ.ஆர் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ருக்மணி, சிவகங்கை: வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரில் திருத்தமோ, மாற்றமோ இருந்தால் விண்ணப்பம் செய்து சரி செய்து கொள்ளலாம். ஆனால், எவ்வித காரணமும் இல்லாமல் எதற்காக நாம் விண்ணப்பிப்பது என்றே தெரியவில்லை. எங்கள் மாவட்டத்தைப் பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளில் முதியோர்கள் மட்டும் தான் உள்ளனர். அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பலரும் தொழில் மற்றும் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இப்படி இருக்கும்போது வீட்டிலுள்ள முதியோர்களால் எப்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க முடியும்? அல்லது வெளிநாடுகளில் உள்ளவர்களின் பெயர்கள் தொடருமா? நீக்கப்படுமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.
ராஜலட்சுமி, மதுரை: வாக்காளர் திருத்த பணி குறித்தோ, இதற்கு தேவையான ஆவணங்கள், முந்தைய விபரங்கள் குறித்தோ பெரும்பாலான வாக்காளர்களுக்கு எந்தவிதமான புரிதலும் இல்லை. தற்போதைய வாக்காளர் ஒருவருக்கு அவரது பெற்றோர் வாக்காளராக இருந்த விபரம் தெரியாது. பலர் இறந்துள்ளனர். அவர்களது வாக்கு நீக்கப்பட்டிருக்கலாம். அவரது விபரத்தை எப்படி அவரது வாரிசுகள் வைத்திருக்க முடியும்?
திருத்த விண்ணப்பத்தின் போது தற்போதைய புகைப்படமும் ஒட்ட வேண்டுமாம். இதுதொடர்பாக பொதுமக்களுக்கு என்ன விழிப்புணர்வு செய்யப்பட்டது? விண்ணப்பத்தை தவறாக நிரப்பினாலோ, போதிய விபரம் இல்லாவிட்டாலோ அவர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலை உள்ளது. தற்போதைக்கு தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்தல் முடிந்ததும் பணிகளை தொடரலாம்.
லட்சுமி, விருதுநகர்: தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடத்துவது ஒன்றிய அரசின் திட்டமிட்ட சதியாகும். பீகார் மாநிலத்தை போன்று தமிழ்நாட்டிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைக்க பாஜ முயன்று வருகிறது. கடந்த 2002ம் ஆண்டில் வாக்காளர்களின் பாக முகவர் எண் போன்ற விபரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய அறிவுறுத்துகின்றனர். இடம்பெயர்ந்து பல்வேறு ஊர்களில் வசித்து வரும் வாக்காளர்கள் இதுபோன்றதாக முகவரி எண்களை எப்படி தேடி கண்டுபிடித்து பூர்த்தி செய்ய முடியும்? இதனால் பல்வேறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிராகரிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது.
மகாலட்சுமி, விருதுநகர் : பெண்கள் பிறந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு திருமணம் செய்து கொடுக்கப்படுகின்றார். அதேபோல் வேலை நிமித்தமாக பலர் வெவ்வேறு ஊர்களில் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் ஏற்கனவே உள்ள வாக்காளர் பெயர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்களை நீக்கி, தற்போது வசிக்கும் இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று வாக்களித்து வருகின்றனர்.
அவர்களிடம் கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் திருத்த முகாமின் போது எந்த இடத்தில் வசித்தீர்கள்? உங்களது வாக்காளர் முகவர் எண் முதலானவற்றை கேட்பது நியாயம் இல்லை. தமிழ்நாட்டில் பாஜ தோல்வியடைந்து விடுவோம் என்பதற்காக தேர்தல் ஆணையத்துடன் கூட்டு சேர்ந்து குறுக்கு வழியில் ஆதாயம் பெற முயற்சி செய்து வருகிறது. இதனை அனைத்துக் கட்சியினரும் இணைந்து தடுக்க வேண்டும்.
ஹாஜிபாபு, கோட்டார், நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் ஒரு தெருவில் இருந்தவர்கள் மற்றொரு தெருவுக்கு மாறியுள்ளனர், வார்டுகளும் பிரிக்கப்பட்டு மாறியுள்ளது. குறிப்பாக 48 வார்டில் உள்ள மக்கள் 39வது வார்டில் உள்ளனர். முன்பு சேர்ந்து இருந்தது, இப்போது அந்த வார்டுகளை பழைய 2002 பட்டியலில் தேடி கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் உள்ளது. முன்புள்ள பட்டியலில் இருந்த பெயர்களை பலரும் கெசட்டில் மாற்றியுள்ளனர்.
இப்போது அந்த பெயர்கள் உள்ள பட்டியலை ஆதாரமாக கொடுக்க முடியவில்லை. இதற்கு அலுவலர்களிடம் பரிகாரம் இல்லை. அதனால் இது வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க உள்ள நடைமுறை போன்று தெரியவில்லை. மாறாக குடியுரிமை சம்பந்தப்பட்டதாக உள்ளது.
தேவகி, பூஜைப்புரைவிளை, கன்னியாகுமரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியானது பொதுமக்களுக்கு மிகவும் குழப்பத்தை உருவாக்கும் விதத்தில் உள்ளது. இதனை பொதுமக்களுக்கு புரிய வைப்பதற்கு அல்லது சரியான முறையில் இதை நடைமுறைபடுத்துவதற்கான கால அவகாசம் குறைவாக கொடுக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அவசர அவசரமாக இந்த பணிகளை செய்வதால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
ஜஸ்டின் பால்ராஜ், அரமன்னம், திருவட்டார்: தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டு வரும் கணக்கீட்டு படிவத்தில் 2002ம் ஆண்டு நீங்கள் வாக்களித்தபோது உங்களது உறவினர் யார் என்று கேட்கிறார்கள். 23 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள பட்டியலை எடுத்து வைத்து இப்போது அதில் உள்ளவர்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய கூறுவதுதான் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்கின்றனர். அந்த ஆவணங்களுக்கு மக்கள் எங்கே செல்வார்கள். இது குழப்பத்தையும், மக்களிடையே பதற்றத்தையும்தான் ஏற்படுத்தும்.
புஷ்பா, வேலூர்: அங்கன்வாடில சொன்னாங்க, வீட்டுல இருங்க வாரோம்னு. என்னன்னு கேட்டதற்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பாரம் கொடுக்கிறோம். அதை பூர்த்தி செய்து கொடுக்கணும். எங்க வீட்டுல அவ்வளவு விவரமானவங்க யாரும் இல்லை. ஏதோ தப்பா எழுதிட்டா பாரம் ஏத்துக்கப்படாது, என் பேரை பட்டியலில் இருந்து எடுத்துருவாங்கனு சொல்றாங்க. பாரத்தையும் ஜெராக்ஸ் எடுக்கக்கூடாதாமே. அப்போ என்னோட உரிமை என்னாவது?
மல்லிகேசன், கல்புதூர், காட்பாடி: இன்னும் எனது வீட்டுக்கு யாரும் வரவில்லை. சரி, அந்த படிவத்துல அப்படி எதை கேட்டுள்ளார்கள் என்பதற்காக ஒரு படிவத்தை வாங்கி பார்த்தேன். அதில் தற்போதுள்ள வாக்காளரின் புகைப்படத்தை சேர்க்க சொல்லியுள்ளார்கள். தொடர்ந்து ஏதோ முகவரியில் குறிப்பிட்டுள்ளார்கள். எனக்கு அது புரியவில்லை.
சாதாரண மக்களுக்கு என்ன புரியும். தற்காலிக முகவரியில் வந்து தங்கியிருப்பார்கள். தேர்தல் நேரத்தில் தங்கள் நிரந்தர முகவரிக்கு சென்று வாக்களிப்பார்கள். இதுதான் காலம், காலமாக உள்ள நடைமுறை. இப்போது அந்த வாக்காளரின் நிரந்தர முகவரியில் சென்று படிவத்தை நீட்டினால் யார் பூர்த்தி செய்து கொடுப்பார்கள்? அப்படியானால் அந்த வாக்காளரின் வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படும். இது சட்ட விரோதமானது.
சண்முகம், நெல்லை டவுன்: வாக்காளர் பட்டிலில் வாக்காளர்கள் அனைவரும் இடம் பெற்றுள்ள போது தீவிர திருத்தம் என்பது தேவையில்லாதது. வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மைப் படுத்த வேண்டும் என்றால் வீடு, வீடாக சென்று இறந்தவர்கள் பெயரை நீக்கி, புதிதாக தகுதியானவர்கள் இருந்தால் அவர்களை இடம் பெறச்செய்தால் மட்டுமே போதுமானது. வீடு மாறிச் சென்றவர்களை அவர்களது தற்போதைய முகவரியில் சேர்த்து விட்டால் தூய வாக்காளர் பட்டியல் தயாராகி விடும்.
அதை தவிர்த்து விட்டு 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு தற்போதுள்ள வாக்காளர் பட்டியலுடன் தொடர்புபடுத்துவது முரண்பாடானது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களிடம் புதிதாக படிவம் தந்து நிரப்பித் தர கட்டாயப்படுத்துவது ஏன்? தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களின் ஓட்டுக்களை சேர்த்தால் வீண் குழப்பங்கள் உருவாகும். எனவே சிறப்பு தீவிர திருத்தம் மூலம் தவறு செய்ய முயற்சி நடக்கிறது.
தனசேகரன், சேலம்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியால் அதிகம் பாதிக்கப்படுவோர் விளிம்புநிலை மக்கள் தான். நிலையான இருப்பிடம் இல்லாமல் அவர்கள் பிழைப்புக்காக ஒவ்வொரு பகுதியாக சென்று இடம் பெயர்ந்து வாழ்கின்றனர். பட்டியல் சரிபார்க்கும்போது குறிப்பிட்ட இடத்தில் இதுபோன்றவர்கள் இல்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை காரணம் காட்டி அவர்களின் வாக்குரிமை பறிக்கப்படும் சூழல் உள்ளது.
சிவசக்தி, சூரம்பட்டி, ஈரோடு: எஸ்ஐஆர் பணிகளை ஒராண்டுக்கு முன் செய்திருக்க வேண்டும். இன்னும் 4 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இந்த திருத்த பணிகளை மேற்கொள்வது சாத்தியப்படாது. எனது மகள் ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
அவரை இதற்காக வரவழைப்பது என்பது சாத்தியமில்லை. அதேபோல் நான் வாடகைக்கு குடியிருப்புகளை வைத்துள்ளேன். எனது வீட்டில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்பவர்கள் தான். வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் அலுவலர்கள் வரும் சமயத்தில் அவர்கள் இருப்பதில்லை. இதனால், அவர்கள் பெயரை நீக்க முடியுமா?. இந்த திருத்த பணிகளை தவறு என கூறவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிந்து மேற்கொள்ளலாம்.
அம்சவேணி, எம்.ஜி.ஆர். காலனி, திருப்பூர்: பீகாரை போன்று தமிழகத்திலும் வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிறப்பு தீவிர திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாஜ சதி வேலைகளில் இதுவும் ஒன்று. பீகாரில் இது குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு கூறியும், தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை.
ஆனால் இந்த ஒரு மாதத்தில் அதிகாரிகள் கொடுக்கும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டும் தான் வாக்காளர்களாக தொடர முடியும் என்பது எளிதான காரியம் அல்ல. எனவே, அரசியல் கட்சியினர் எழுப்பியுள்ள நியாயமான கோரிக்கையை தேர்தல் ஆணையம் கருத்தில் கொண்டு சிறப்பு தீவிர திருத்தத்தை கைவிட வேண்டும்.
புவனேஷ்வரி, பீளமேடு புதூர், கோவை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் பெருமளவில் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வெளி மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் பலருக்கு தங்களது சொந்த ஊரில் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்கள் வீட்டுக்கு செல்லும்போது ஆட்கள் இல்லாத நிலையால், தனது வாக்குரிமை பறிபோகும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை அடிப்படை ஆதாரமாக பொருந்தாது என அறிவிக்கப்பட்டிருப்பதும் ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் தகுதி வாய்ந்த பலரது உரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மருதைமுத்து, கள்ளக்குறிச்சி: எஸ்ஐஆர் சிறப்பு தீவிர திருத்த விண்ணப்பித்தில் கேட்கின்ற கேள்விகள் புரியவில்லை. இதனால் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. ஒரு மாதத்திற்குள் இதை கொடுக்க கெடு விதித்தால் எப்படி?. படிக்காத பாமர மக்களால் எப்படி இதை பூர்த்தி செய்வார்கள். இல்லாவிடில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும் என்பது ஏற்புடையது அல்ல. எனவே வாக்காளர்களுக்கு கூடுதல் கால அவகாசம் கொடுத்து விண்ணப்பங்களை பெற வேண்டும். முதலில் அதற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேவி, உளுந்தூர்பேட்டை: நேர்மையான தேர்தலை நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அதற்குரிய கால அவகாசம் கொடுத்தால்தான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும். புதிய வாக்காளர் சேர்க்கைக்கு கேட்கப்படும் ஆவணங்களை குறுகிய காலத்தில் சமர்ப்பிப்பது மிகவும் கடினம். பீகாரில் பாஜ எதிர்ப்பு வாக்குகளை குறிவைத்து நீக்க சதித் திட்டம் நடத்தப்பட்டதாக பல்வேறு ஜனநாயக அமைப்புகள் குற்றம் சாட்டியது.
இதுதொடர்பாக எந்த பதிலையும் மக்கள் மன்றத்துக்கோ உச்சநீதிமன்றத்துக்கோ தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. இதற்கான அலுவலர்கள் விண்ணப்பங்களுடன் வீடுகளுக்கு செல்லும்போது வயதானவர்களே வீடுகளில் உள்ளனர். ஒரு குடும்பத்தில் இருவருமே வேலைக்குச் செல்லக்கூடிய சூழல் உள்ளது. இதை பெறுவதில் கடினமாக உள்ளது. எனவே குறுகிய கால இப்பணியை கைவிட வேண்டும்.
கந்தன், விவசாயி, திருவாரூர்: பாஜ மற்றும் அதனை சேர்ந்த கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு குறுக்கு வழிகளில் செயல்பட்டு வருகிறது. இதற்கு தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்திய தேர்தல் ஆணையமும் பாஜவின் கைப்பாவையாக மாறிவிட்டது. சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 500 வாக்குகள் முதல் 5 ஆயிரம் வாக்குகள் வரை ஒரு தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காக இருந்து வரும் நிலையில், இவற்றில் வெளி மாநில தொழிலாளர்களை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்து அந்த வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முடிவை வெளிமாநில தொழிலாளர்கள் கையில் வழங்குவதற்காக தான் இந்த சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
கோவிந்தராஜன், விவசாயி, தஞ்சாவூர்: இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடப்பது போல் உள்ளது. தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் ஏஜெண்ட் போல் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் வடமாநிலத்தவர்களுக்கு இங்கே வாக்குரிமை கொடுத்தால் தமிழ்நாடு இன்னொரு இந்தி பேசும் மாநிலமாகும். அவர்களிடம் அதிகாரமும் சென்றால் நாம் அகதிகள் போல்தான் மாறிவிடுவோம். இதில் நேர்மையில்லை, வெளிப்படைத் தன்மையில்லை. இது மிரட்டல் போல் உள்ளது. தமிழர்களின் உரிமையை, வாக்குரிமையை பறிக்கும் செயல் இது.
* வடமாநில தொழிலாளர்களை பூர்வகுடிகளாக்க முயற்சி
சிவசுப்ரமணியன், உடன்குடி: உடன்குடியில் நடந்து வரும் அனல்மின் நிலையம், துறைமுகப் பணி, ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட பணிகளில் பீகார், ஒரிசா, குஜராத், ஜார்கண்ட், மேற்குவங்கம் என பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் பணியின் நிமித்தமாக தற்போது வேலை நடைபெறும் பகுதிகளிலேயே குடிசை அமைத்து தங்கி உள்ளனர்.
இந்த எஸ்ஐஆர் மூலம் இதுபோன்ற வட மாநில தொழிலாளர்களை தமிழகத்தில் வாக்குரிமையைப் பெறவைக்க இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு பயன்படுத்தக்கூடிய சூழல் உள்ளது. ஏற்கனவே இங்கு நடைபெறும் பணிகளுக்கு உள்ளூர் வேலையாட்களை பணிக்கு சேர்க்காமல் வட மாநில தொழிலாளர்களைக் கொண்டு பணிகளை செய்து வரும் நிலையில் அவர்களுக்கு வாக்குரிமையும் கிடைத்து விட்டால் பூர்வகுடிகள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களுக்குரிய பல்வேறு உரிமைகளும் இழக்க கூடிய சூழல் ஏற்படும்.
* இறப்பு சான்று கொடுத்தாதான் எனக்கு ஓட்டாம்...இந்த வயசுல எங்க போவேன்
ஜெயலட்சுமி, அரியூர், வேலூர்: ஓட்டு போடறவங்க பட்டியலை ஏதோ திருத்த போறாங்கனு வந்து சொல்லிட்டு போனாங்க. அதோடு ஒரு பாரத்தை கொடுப்பாங்களாம். அதை பூர்த்தி செய்து கொடுக்கணுமாம். அதுல என்ன விவரம்னு கேட்டா, செத்தவங்களுக்கான சான்று இணைக்கணுமாம். அது இணைக்காட்டி என்னோட பேரும் பட்டியல்ல இருக்காதாம். அந்த சான்றுக்கு நான் எங்க போறது இந்த வயசுல (90 வயது). என்கிட்ட இருக்கிற ஓட்டு அடையாள அட்டையில எதுவுமே நான் மாத்தல. ஆனா, பட்டியல்ல என் பேர் இருக்குது. இப்ப எடுத்துட்டாங்கனா ஓட்டு போட முடியாது, அவ்வளவுதான். என்ன சொல்றது போங்க...
* தகுதியான வாக்காளர்களை நீக்கும் முயற்சிதான் எஸ்ஐஆர்
செந்தில்குமார், தாதம்பட்டி, சேலம்: தேர்தல் ஆணையம் உண்மையான தகுதியற்ற வாக்காளர்களை நீக்கம் செய்வதை வரவேற்கிறோம். ஆனால் வாக்காளர்களை உறுதி செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கணக்கீட்டு படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் 50 சதவீதத்திற்கு மேல் பதிலளிக்க முடியாது. குறிப்பாக, கடந்த 2002 மற்றும் 2005ம் ஆண்டில் இருந்த வாக்காளரின் பாக எண், வரிசை எண், இறந்துபோன தாய், தந்தையரின் இறப்பு சான்றிதழ், அவர்களின் வாக்காளர் அட்டை போன்றவற்றிக்கு எங்கே செல்வது? எனவே இது முழுக்க, முழுக்க தகுதியுடைய வாக்காளர்களையும் நீக்கும் ஒரு முயற்சியாக தான் பார்க்க முடியும்.
* உள்நாட்டிலேயே அகதிகளாக மாற்ற முயற்சி
தினேஷ், சட்டக்கல்லூரி மாணவர், சேலம்: உள்நாட்டில் வாழும் வாக்காளர்களை, நாடற்றவர்களாக மாற்றும் முயற்சி தான் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள். பீகாரில் வாக்காளர் திருட்டு அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாஜகவின் தூண்டுதலின் பேரில் தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் உள்நாட்டு வாக்காளர்களை அகதிகளாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதிகாரிகளே திணறும் நிலைமை காணப்படும்போது, சாதாரண மக்களால் எப்படி தங்களது வாக்குரிமையை உறுதிசெய்ய முடியும். எனவே, உடனடியாக தேர்தல் ஆணையம் இதனை வாபஸ் பெற வேண்டும்.
* விளவங்கோட்டில் வசிக்கும் மலையாள மக்களுக்கு சிக்கல்
விஜயகுமாரி, அண்டுகோடு, விளவங்கோடு: விளவங்கோடு தொகுதியில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ளனர். தற்போது தந்துள்ள கணக்கீட்டு படிவம் தமிழில் மட்டுமே உள்ளது, ஆங்கிலமும் இல்லை. இதனால் படிவத்தில் குறிப்பிட்டுள்ள விபரங்களை நேரடியாக பூர்த்தி செய்வது சிரமம். மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளும் குழப்பத்தையே தருகிறது.
* பெற்றோர் இல்லாதவர்களின் நிலை என்ன?
மோகன்தாஸ், சிதம்பரம்: சாதாரண ஏழை மக்களின் வாக்குகளை திட்டமிட்டு அகற்றுவதற்கான முயற்சி இது. வழக்கமான நடைமுறையே தற்போதைக்கு போதுமானதாகும். முழுமையான சிறப்பு திருத்தம் வரவேற்கத்தக்கது என்றாலும் குறைந்தபட்சம் 3 மாத காலஅவகாசமாவது தேவை. தற்போதைய விண்ணப்பத்தில் 2002-2004ம் ஆண்டு பட்டியலில் பெயர் இருக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவர்களின் தாய்-தந்தை பெயர் இருக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
ஒருவேளை பெற்றோர் இல்லாதவர்கள் இருந்தால் அவர்கள் நிலைமை என்ன?. இறப்பு சான்றிதழ் பெற வேலையை விட்டு அலைய வேண்டிய நிலை உள்ளது. சாதாரண படிப்பறிவு இல்லாத மக்களில் எத்தனை பேர் இறப்பு சான்றிதழ் கையில் வைத்திருப்பார்கள் என்று கூற முடியுமா?. இது வாக்காளர் திருத்தப்பட்டியல் இல்லை மாறாக வாக்கு திருட்டு விண்ணப்பம் என்பதே சரி.
