Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

திருச்சி: வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்தப்பட்ட ரூ.22 கோடி மதிப்பிலான தொன்மை வாய்ந்த 6 சாமி சிலைகளை திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தொன்மை வாய்ந்த சாமி சிலைகள் கடத்தப்பட்டு விற்கப்படுவதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் திருச்சி சரக தனிப்படையினர், கடந்த 6ம் தேதி தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தீவிர வாகன வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, தஞ்சாவூர் பெரியார் சமத்துவபுரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரில் சோதனை செய்தனர். இதில் உள்ளே மறைத்து வைத்திருந்த 6 சாக்கு பைகளை திறந்து பார்த்தபோது, திரிபுரந்தகர், தேவதாந்திர தக்ஷிணாமூர்த்தி, ரிஷபதேவர், அம்மன் / தேவி சிலைகள் என 6 சாமி சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, டிரைவரான சேலம் மாவட்டம் கொங்கணாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (42), நண்பர் மயிலாடுதுறை மாவட்டம், கொருக்கையை சேர்ந்த லெட்சுமணன் (64) மற்றும் மருமகன் திருமுருகன் (39) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘‘மயிலாடுதுறை மாவட்டம், கொருக்கை கிராமத்தை சேர்ந்த லெட்சுமணன் 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் கட்டுமானத்திற்காக குழிதோண்டியுள்ளார். அப்போது, தொன்மை வாய்ந்த 6 சிலைகள் கிடைத்துள்ளன. இதுபற்றி அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தாமல் வீட்டிலேயே சிலைகளை பதுக்கி வைத்துள்ளார். தனது நண்பரான ராஜேஷ்கண்ணனுக்கும், மருமகனுக்கும் தெரிவித்துள்ளார். அவர்கள் கூறியபடி சிலைகளை விற்க காரில் எடுத்து சென்றபோது சிக்கினர். கைப்பற்றப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.22 கோடி இருக்கும்’’ என்று தெரிவித்தனர்.