வெளிநாட்டுக்கு தப்பியோடும் குற்றவாளிகளுக்கு ‘செக்’ ‘ரெட் கார்னர்‘ நோட்டீஸ் வந்தால் ‘பாஸ்போர்ட்’ ரத்து: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்
புதுடெல்லி: வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த, சர்வதேச தரத்திலான சிறப்புச் சிறைகளை உருவாக்குவது, இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பெற்றவர்களின் பாஸ்போர்ட்டை ரத்து செய்வது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்மொழிந்துள்ளார்.இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன்பெற்று மோசடி செய்த தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி போன்ற பொருளாதாரக் குற்றவாளிகள், ‘இந்திய சிறைகளின் மோசமான நிலைமைகள் தங்களது மனித உரிமைகளை மீறும்’ என்று கூறி, தங்களை நாடு கடத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங்களில் வாதாடி வருகின்றனர்.
இந்த உத்தியை முறியடிக்கும் வகையில், தப்பியோடும் குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சில முக்கிய திட்டங்களை முன்வைத்தார். அதன்படி, ஒவ்வொரு மாநிலமும் சர்வதேச தரத்தில் குறைந்தது ஒரு சிறை அறையையாவது உருவாக்க வேண்டும். ஒரு குற்றம்சாட்டப்பட்டவர் மீது இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவுடன், அவரது பாஸ்போர்ட்டை உடனடியாக முடக்கி, ரத்து செய்ய வேண்டும். தற்போதைய தொழில்நுட்பத்தில் இது கடினமான காரியம் அல்ல. இது, குற்றவாளிகளின் சர்வதேச பயணத்தைத் தடுக்க உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
புதிய பிஎன்எஸ் சட்டத்தின் கீழ், ‘குற்றவாளி ஆஜராகமலேயே வழக்கை விசாரிக்கும்’ முறையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அமித் ஷா வலியுறுத்தினார். இந்த விதியின்படி, குற்றவாளி தப்பியோடியவராக இருந்தாலும், வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும். ஒருவேளை அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர் நேரில் ஆஜராக வேண்டும்.
மேலும், பாஸ்போர்ட் ஏஜென்சிகள் மற்றும் சட்ட அமலாக்கத் துறைகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், இன்டர்போல் ‘ப்ளூ நோட்டீஸை’ (தகவல் கோருதல்) ‘ரெட் நோட்டீஸாக’ (கைது செய்ய) மாற்றுவதை விரைவுபடுத்த மாநிலங்கள் சிறப்புப் பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். தப்பியோடிய குற்றவாளிகளின் குற்றங்கள், அவர்கள் இருக்கும் இடங்கள், அவர்களது தொடர்புகள் மற்றும் நாடு கடத்தல் முயற்சிகளின் நிலை ஆகியவற்றைக் கொண்ட தேசிய தரவுத்தளத்தை உருவாக்கவும் அவர் பரிந்துரைத்தார்.
குற்றவாளிகள் வெளிநாடுகளில் சட்ட, நிதி மற்றும் அரசியல் ஆதரவைப் பெறுவதைத் தடுக்க அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாநிலங்களின் சிறப்புப் பிரிவுகளுக்கு சி.பி.ஐ. வழிகாட்ட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். இதன் மூலம், வெளிநாட்டில் பதுங்கி, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் குற்றவாளிகளை இந்தியாவிற்கு கொண்டு வந்து, கடுமையான நடவடிக்கைகளை உறுதி செய்ய முடியும் என்று அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.