Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

60 வயது கடந்தவர்கள் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

*ரெட்டியார்சத்திரம் புதுச்சத்திரத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புதுச்சத்திரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முகாமை துவக்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை வீடு தேடி சென்றடைய செய்யும் வகையில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் சமயத்தில் சொன்னபடி மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 1.16 கோடி மகளிர் மாதம் ரூ.1000 பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான அனைவருக்கும் வீடு தேடி மகளிர் உரிமை தொகை வழங்கப்படும். 60 வயது கடந்த அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி அவர்களுக்கு வீடு கட்டி தரப்படும்.

இம்முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, கணவனை இழந்தவர்கள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் குடிநீர், கழிப்பறை சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், குளத்தை தூர்வாரும் பணிகள், வாய்க்கால் உருவாக்குதல் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு அமைச்சர்களும் முதலமைச்சருக்கு பதிலாக அவரது சார்பில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாக பெற்று அரசுக்கு அனுப்பி வைத்து உடனடியாக தீர்வு காணும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரே நேரில் வந்து மனுக்களை பெற்று கொண்டதாகத்தான் அதற்கு அர்த்தம். அந்த அளவிற்கு இம்முகாமிற்கு முக்கியத்துவம் உள்ளது. இங்கு பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உடனடியாக முதலமைச்சரின் நேரடி பார்வைக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எல்லாருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை நமது முதலமைச்சர் உருவாக்கி உள்ளார்.

இது உங்களுடைய அரசு, மக்களின் அரசு. இவ்வாறு பேசினார். தொடர்ந்து இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்பட்டு 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 2 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை அமைச்சர் வழங்கினார்.இதில் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், உதவி இயக்குனர் ஊராட்சிகள் (தணிக்கை) கருப்புசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மலரவன், மேற்கு வட்டாட்சியர் ஜெயபிரகாஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரதராஜன், ஆர்த்திபா, சுமதி, பிரபாகரன், திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜேஷ் பெருமாள், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் மலைச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தமிழ்செல்வன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எ.ஆர்.கே. ரமேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் லட்சுமி, ராதா தேவி, துணை தலைவர் கிருஷ்ணவேணி காளியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் இளங்கோ, ராமகிருஷ்ணன், கிளை செயலாளர்கள் முத்துராஜ், வேல்முருகன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஊராட்சி செயலாளர் செந்தில் முருகன் நன்றி கூறினார்.