ஈரோடு: ஆடி மாதப்பிறப்பையொட்டி, ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள சுந்தரவல்லி உடனுறை சோழீஸ்வரர் கோயிலில், வில்வ லிங்கம் மற்றும் மூலவருக்கு 1008 குடம் தீர்த்த அபிஷேம் நடைபெற்றது. முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து கோயில் வரை, வரிசையாக நின்ற 150க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஆற்றிலிருந்து ஒருவர் கைமாற்றி ஒருவராக, தீர்த்தம் எடுத்துக் கொடுக்க, சிவாச்சாரியார்கள், வில்வ லிங்கம் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, பால், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சுகுமார்(தக்கார்), கோயில் செயல் அலுவலர் திலகவதி மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் மேற்கொண்டனர்.
இதேபோன்று, மாநகரில் உள்ள பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன், சூரம்பட்டி வலசு மாரியம்மன், வீரப்பன்சத்திரம் மாரியம்மன், கருங்கல்பாளையம் மாரியம்மன், கொங்கலம்மன், கள்ளுக்கடை மேடு மாரியம்மன், காவிரிக்கரை கன்னிமார் கருப்பண்ணசாமி கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனால், கோயில்களில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. நாளை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, மாநகரில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும், சிறப்பு பூஜை, அலங்காரம் மற்றும் திருவீதி உலாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.