துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடர், சூப்பர் 4 சுற்று போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை இந்தியா வென்றது. ஆசிய கோப்பை டி20 தொடர், ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய், அபுதாபி நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று நடந்த சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் சுப்மன் கில்லும், அபிஷேக் சர்மாவும், வங்கதேச வீரர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். 6.2 ஓவரில் சுப்மன் கில் (29 ரன்) ஆட்டமிழந்தார்.
அபிஷேக், 25 பந்துகளில் 50 ரன்னை(3 சிக்சர், 5 பவுண்டரி) எட்டினார். அவருடன், சிவம் தூபே இணை சேர்ந்தார். அதன் பின் சிறிது நேர இடைவெளியில் சிவம் தூபே (2 ரன்), அபிஷேக் (75 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (5 ரன்), திலக் வர்மா (5 ரன்) என அடுத்தடுத்து அவுட்டாகினர். பின்னர் இணை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா (38 ரன்), அக்சர் படேல், பொறுப்புடன் ஆடினர். 6வது விக்கெட்டுக்கு, அவர்கள் 39 ரன் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யா அவுட்டானார்.
20 ஓவர் முடிவில் இந்தியா, 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்தது. அக்சர் படேல் 10 ரன்னுடன் களத்தில் இருந்தார். வங்கதேசம் தரப்பில் ரிஷத் ஹொசேன் 2, தன்ஸிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான், முகமது சைபுதீன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 169 ரன் வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 19.3 ஓவரில் 10 விக்கெட்டை பறிகொடுத்து 127 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக சாயிப் ஹாசன் 69 ரன், பர்வேஸ் 21 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் குல்தீப் 3 விக்கெட், பும்ரா, வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட், அக்சர் படேல், திலக் வர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் அசத்தலாக வென்றது.