சென்னை: 5 நபர்களுக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள் மற்றும் சுமார் 860 சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் மற்றும் குழந்தைகளைக் கவரும் வகையில் சென்னை மாநகரிலுள்ள 21 ஆவின் ஜங்சன் பாலகங்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக 12 பாலகங்களில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரிக்க பல்வேறு விற்பனை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சென்னையில் பால் உப பொருட்கள் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 30% அதிகரித்துள்ளது. மே 2025-இல் ரூ.29 கோடி, ஜூன் 2025-இல் ரூ.30.30 கோடி மற்றும் ஜூலை 2025-இல் ரூ.32.35 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. இவ்விற்பனையானது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது என பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும் 2025-2026 ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் பால்வளத்துறை மானியக் கோரிக்கையில் அமைச்சர் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனையை அதிகரிக்க ரூபாய் 210 லட்சம் மதிப்பீட்டில் 600 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்படும் என அறிவித்தார்.
அதனடிப்படையில் முதற்கட்டமாக 60 எண்ணிக்கையிலான உறைகலன்கள் கொள்முதல் செய்து கடந்த மே 21ம் தேதி வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று அமைச்சர் த.மனோதங்கராஜ் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதியதாக 5 நபர்களுக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணைகளையும், 5 நபர்களுக்கு ஆவின் பாலகங்களுக்கான நியமன ஆணைகளையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஒரு நபருக்கு தட்டச்சர் நியமன ஆணையும், ஒரு நபருக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வாகனத்தையும், பால் உப பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு, இரண்டாம் கட்டமாக கொள்முதல் செய்யப்பட்ட 60 எண்ணிக்கையிலான உறைகலன்களை ஆவின் முகவர்களுக்கும் வழங்கினார்.
தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்த 6084 சங்க செயலாளர்கள் உடன் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் வங்கி கடன் உதவி பெற்று வழங்குவது, அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களையும் பொருளாதாரத்தில் நிலைத்த தன்மையுடைய சங்கங்களாக உருவாக்குவது மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களை பல்வேறு சேவை மையங்களாக மாற்றுவது அகியவை குறித்து பால்வளத்துறை அமைச்சரால் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க செயலாளர்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும் பால் கொள்முதல் அதிகரிப்பதற்கான உத்திகள், புதிய உறுப்பினர் சேர்க்கை, பால் உற்பத்தியாளர்களுக்கு தங்கு தடையின்றி பால் பணப்பட்டுவாடா செய்தல், ரூ.3/- ஊக்கத்தொகை வழங்குதல், 100% நிகழிட ஒப்புகை வழங்குதல்,கறவை மாடுகளுக்கு சரிவிகித உணவு வழங்குதல், கறவை இனங்களுக்கு உரிய இடைவெளியில் செயற்கை முறை கருவூட்டல் செய்தல் ஆகியவை குறித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பால்வளத்துறை அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அரசு செயலாளர், மருத்துவர் ந. சுப்பையன், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.