Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அவர்களுக்கு ஆப்பு வைத்தால்தான் உருப்படும் யூடியூப்பில் பணம் கொடுத்து திட்ட வைக்கிறார்கள்: தென்னிந்திய நடிகர் சங்க 69வது பொதுக்குழுவில் வடிவேலு ஆவேசம்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69வது பொதுக்குழு கூட்டம் நேற்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடந்தது. மறைந்த சரோஜாதேவி, டெல்லி கணேஷ், ராஜேஷ், ஏ.பிரகாஷ், மனோஜ் கே.பாரதி, ரோபோ சங்கர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி எஸ்.முருகன், பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் சிவகுமார், ஜி.வி.பிரகாஷ் குமார், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, ஸ்ரீமன், பசுபதி, சச்சு, லதா, அம்பிகா, ரேகா, சர்மிளா, ரோகிணி கலந்துகொண்டனர். எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நடிகர் வடிவேலு பேசுகையில், ‘‘பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல், யூடியூப்பில் சிலர் நம்மை பற்றி அசிங்கமாக, அநாகரீகமாக, தப்பு தப்பாக தொடர்ந்து பேசி வருகிறார்கள். கலைஞர்களுக்குள் லேசாக சின்ன விரிசல் விழுந்தால் கூட, அதை ஊதி பெரிய கிணறு வெட்டுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு எல்லாம் ஆப்பு வைத்தால்தான் திரையுலகம் உருப்படும்.

அதே நேரத்தில், நடிகர்களிலேயே சிலர் இதுபோன்ற ஆட்களை பணம் கொடுத்து, தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கு எதிராக பேச வைக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் இதேபோன்ற வேலை நடக்கத்தான் செய்கிறது. இதற்கு நம் சங்கத்தில் இருக்கும் சில நடிகர்களே உடந்தையாக இருக்கிறார்கள். இதுவே கேரளாவாக இருந்திருந்தால், இப்படி பேசுபவர்களை பிதுக்கி எடுத்து, மசாலா தடவி இருப்பார்கள்.

ஆனால், இங்கே யாரும் அப்படி செய்வதில்லை. இப்போதைய தலைவர் நாசர் உள்பட நடிகர் சங்க பொறுப்பில் இருப்பவர்கள், போர்க்கால நடவடிக்கையாக இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை உண்டு, இல்லை என்று பண்ண வேண்டும். அப்படி செய்தால்தான், நடிகர் சங்கம் என்றால் என்ன என்று அவர்களுக்கு புரியும்’’ என்று ஆவேசமாக பேசினார்.

* தமிழக முதல்வருக்கு நன்றி

நடிகர் சங்க பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடிகர் சங்க வளர்ச்சிக்காகவும், உறுப்பினர் நலனுக்காகவும், சென்னையை அடுத்த பையனூரில் குடியிருப்புகள் கட்ட ஒதுக்கப்பட்ட குத்தகை நிலத்தின் பயன்பாட்டை கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து புதிய அரசாணை வழங்கி, தமிழ் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை 8ல் இருந்து 4 சதவீதமாக குறைத்து அரசாணை வெளியிட்டு,

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திரைப்படங்களுக்கான தமிழ்நாடு அரசு விருதுகளை வழங்கும் பொருட்டு விருதுக்குழு அமைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மு.பெ.சாமிநாதன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.