முன்பெல்லாம் நிலக்கடலை, எள், உளுந்து என எந்தப் பயிரை சாகுபடி செய்தாலும் அந்த வயலில் ஆமணக்கிற்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். இப்போது ஆமணக்கு பயிரிடப்படும் நிலத்தின் பரப்பு குறைந்திருந்தாலும் பல இடங்களில் சாகுபடி தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இதில் சில நோய் தாக்கங்கள் ஏற்பட்டு உற்பத்தி பாதிக்கப்படும் நிலையும் தொடர்கிறது. அதில் சாம்பல் பூஞ்சாண நோய் அதிக அளவில் இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் குறித்தும், அதைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இந்தக் கட்டுரையில் விரிவாக தருகிறார்கள் சேலம் ஏத்தாப்பூரில் இயங்கி வரும் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த ராஜேஷ், வெங்கடாச்சலம், வீரமணி ஆகியோர்.
இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ஆமணக்கு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழ்நாடு, கர்நாடகா, ஒரிசா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஆமணக்கு விளைவிக்கப்படுகிறது. ஆமணக்குச் செடி பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நோய்க் கிருமிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இதில் சாம்பல் பூஞ்சாண நோய் அதிக விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். இது ஆமணக்கு பூ (மஞ்சரி) மற்றும் காய்களில் நேரடியாக சேதத்தை ஏற்படுத்தும்.
போட்டோடிரிஸ் ெரசினி என்ற பூஞ்சைதான் இந்த சாம்பல் பூஞ்சாண நோயை ஏற்படுத்துகிறது. இந்தப் பூஞ்சை பெண் பூக்களையே அதிகம் தாக்கும். பெண் பூக்கள் அதிகம் சதைப்பற்றுடனும், நீர் துளிகள் தேங்குவதற்கு ஏதுவாகவும் இருப்பதுதான் அதற்கு காரணம். இந்த நோய் ஆரம்ப அறிகுறியாக முதலில் மஞ்சரியின் பூ மற்றும் காய்களில் சிறிய நீல நிற புள்ளியை தோற்றுவிக்கும். பின்பு கருமை நிற குழிந்த புள்ளிகளாக மாறும். இதில் இருந்து மஞ்சள் நிற திரவம் வெளியேறும். மேலும் பூஞ்சையின் வளர்ச்சி அதிகமாக காணப்படும். நீண்ட நாட்களுக்கு அதிக ஈரப்பதம் தொடர்ந்து நிலவினால் வெளிப்புற சாம்பல் நிற பூஞ்சாண வளர்ச்சி காணப்படும்.
சில நேரங்களில் பூஞ்சாணம் தாக்கி ஆமணக்குச் செடியின் தண்டு முறிந்துவிடும். மழைக்காலங்களுக்கு பிறகு பயிரிடப்படும் ஆமணக்கில் இது அதிக அளவில் காணப்படும். தொடர்ந்து பெய்யும் குறைந்த மழை மற்றும் காலை நேர பனியானது இந்த நோயை தோற்றுவிக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை, ஆமணக்குச் செடியை சுற்றி நிலவும் காற்றின் ஈரப்பதம் மற்றும் அதிகப்படியான தழைச்சத்து இப்பூஞ்சாணம் வேகமாக பரவ முக்கிய காரணிகள்.போட்டோடிரிஸ் ரெசினி பூஞ்சை 20 டிகிரி முதல் 25 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அதிக காற்றின் ஈரப்பதத்தில் வளரும். இது சாம்பல் நோய் தாக்கத்தையும் ஏற்படுத்தும். இதன் தீவிரம் 27 டிகிரி வெப்பநிலையுடன் 72 மணி நேரம் இலையில் ஈரப்பதம் நிலவும்போது அதிக அளவில் இருக்கும். ஆமணக்கு பயிர் இல்லாத காலங்களில் ஸ்கிளிரோசியா என்ற பூஞ்சாண உடலமைப்பு தாவரக் கழிவுகளில் இருக்கும். இதன் மூலம் பூஞ்சாணம் நிலத்திலிருந்து அடுத்த பருவத்தில் ஆமணக்கு பயிரைத் தாக்கும்.
ஏதாப்பூரில் உள்ள மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தில் சாம்பல் பூஞ்சாண நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் வானிலை காரணிகளுக்கும், சாம்பல் நோய்க்கும் உள்ள தொடர்பு ஆராயப்பட்டது. இந்த ஆராய்ச்சி ஒய்ஆர்சிஎச்1 என்ற வீரிய ஒட்டு ஆமணக்கு ரகத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் விதைப்பு செய்யப்பட்டு அதனுடன் வானிலை காரணிகளான வெப்பநிலை (அதிகபட்சம் மற்றும் குறைந்தபட்சம்), ஈரப்பதம் மற்றும் மழையளவு கண்காணிக்கப்பட்டது. அத்துடன் சாம்பல் பூஞ்சாண தாக்கமும் கண்காணிக்கப்பட்டு ஒப்பிடப்பட்டது.
ஜூன் மாதத்தில் விதைப்பு செய்யப்பட்ட ஆமணக்கில் சாம்பல் பூஞ்சாண நோய் 36வது வாரத்தில் தோன்றியது கண்டறியப்பட்டது. மேலும் அதன் தாக்கம் 47வது வாரத்தில் அதிகபட்சத்தை எட்டியது. ஜூலை மாதத்தில் விதைப்பு செய்யப்பட்ட ஆமணக்கில் பூஞ்சாண நோய் 42வது வாரத்தில் தோன்றியது. 47வது வாரத்தில் அதிகபட்சத்தை எட்டியது. குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரியும், ஈரப்பதம் 83 சதவீதமும் இருந்தால் இந்த பூஞ்சாண நோய் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை மேலும் குறையும்போது நோய் தாக்கம் அதிகரிக்கும். அதே சமயம் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும்போது நோய் தாக்கம் அதிகரிக்கும். எனவே குறைந்தபட்ச வெப்பநிலை மற்றும் அதிக காற்று நிரப்பும் நிலவும்போது ஆமணக்கில் சாம்பல் பூஞ்சாண நோய் ஏற்படும். அதனைக் கட்டுப்படுத்த நோயின் அறிகுறி தென்பட்ட உடன் பரோபிகோனசால் என்ற பூஞ்சாண கொல்லியை 0.1 சதவீதம் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
உலகெங்கும்கோலோச்சும் ஆமணக்குகிழக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எத்தியோப்பியாவில் தோன்றிய ஆமணக்கு தற்போது உலகில் உள்ள 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிரிடப்படுகிறது. இந்தியா, சீனா, பிரேசில், மொசாம்பிக், எத்தியோப்பியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் உலகின் மொத்த ஆமணக்கு உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் பங்களிக்கின்றன. இந்தியாவில் ஆமணக்கு 0.97 மில்லியன் எக்டர் பரப்பளவில் 1.97 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. சராசரியாக எக்டருக்கு 1999 கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது.