Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமமுகவினர் தாக்குதல் பற்றி எஸ்பியிடம் புகார்; டிடிவி, ஓபிஎஸ் தரப்பில் இருந்து கொலை மிரட்டல்: மாஜி அமைச்சர் உதயகுமார் பேட்டி

மதுரை: மதுரையில் புதுநத்தம் ரோட்டில் உள்ள எஸ்பி முகாம் அலுவலகத்தில் எஸ்பி அரவிந்திடம் அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் நேற்று புகார் மனு அளித்தார். அதில், ‘‘பேரையூர் செல்வதற்காக மங்கல்ரேவு அத்திப்பட்டி விலக்கு அருகே வாகனங்களில் நேற்று முன்தினம் இரவு, சென்று கொண்டிருந்தோம். அப்போது அமமுகவைச் சேர்ந்த அடையாளம் தெரிந்த 10க்கும் மேற்பட்டோர் எனது காரை வழிமறித்து அசிங்கமாக பேசினர்.

நான் சென்றப் பிறகு எனக்கு பின்னால் வந்த காரை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிமுக இளைஞர் பாசறை மேற்கு மாவட்ட இணை செயலாளர் தினேஷ்குமார் (28), அதிமுக நிர்வாகிகளான அபினேஷ் (23), விஷ்ணு (18) ஆகியோரின் மண்டை உடைந்தது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்பி கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் உதயகுமார் கூறியதாவது:

தமிழ்நாட்டில் வன்முறைக்கு இடமில்லை. இதுதான் கடந்த கால வரலாறு. வன்முறையை கையில் எடுத்தவர்கள் வன்முறையால் அழிந்து போய் உள்ளார்கள். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் எங்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். டிடிவி.தினகரன், ஓபிஎஸ் தரப்பில் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல், உயிருக்கு அச்சுறுத்தல் வருகிறது. டிடிவி.தினகரன் தூண்டுதலால் ஆயுதங்களுடன் வந்த அமமுகவினர், அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கலாம். அதிமுகவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.இவ்வாறு தெரிவித்தார்.

4 பேர் கைது: அதிமுகவினர் மீது அமமுக நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது குறித்து, சேடபட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அமமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி (55)உட்பட 4 பேரை நேற்று கைது செய்தனர்.