Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடிக்கிருத்திகை கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பெற்ற ஆடி கிருத்திகை அஸ்வினியுடன் நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிக்கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது. விழாவை யொட்டி மூலவருக்கு நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு மரகதமாலை, பச்சைக்கல் முத்து, தங்க வைர வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உட்பட பிற மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தணியில் குவிந்து வருகின்றனர்.

சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணிந்திருந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கோயில் குளத்தில் நீராடி சரவண பொய்கை திருக்குளம் வழியாகவும், நல்லாங்குளம் அருகே படிகள் வழியாக மலைக் கோயிலில் குவிந்தனர். பம்பை உடுக்கை மேள தாளங்கள் முழங்க காவடிகளுடன் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் விண்ணதிர நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் செய்யப்பட்டு ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா நடைபெறும் 5 நாட்களும் பொதுவழியில் இலவச தரிசன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.

அமைச்சர் தரிசனம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை திருப்படிகள் வழியாக குடும்பத்துடன் நடந்து வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘ஆடி மாதத்தில் 2 கிருத்திகை வந்துள்ளது மிகவும் விசேஷம். ஆடிக்கிருத்திகையில் காவடிகள் செலுத்தும் பக்தர்கள் தடையின்றி சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விரைவாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏதுவாக ரூ.100 சிறப்பு கட்டண தரிசனம் விழா நடைபெறும் 5 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டு பொது வரிசையில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு எம்.எல்.ஏ நந்தகுமார், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன், கோயில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, உஷா ரவி, மோகனன், நாகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பதி கோயில் பட்டு வஸ்திரங்கள் வழங்கல்: ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமல ராவ் தலைமையில் பட்டுவஸ்திரங்கள் கொண்டு வரப்பட்டது. அவர்களை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர், மூலவர், உற்சவருக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.