திருவனந்தபுரம்: சபரிமலையில் புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக கோயில் பிரதிஷ்டை கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதற்காக கடந்த 11ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு 13ம் தேதி இரவு சாத்தப்பட்டது. இந்நிலையில் ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார்.
நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, நெய்யபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகளும், உதயாஸ்தமய பூஜை, படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் தொடங்கும். வரும் 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
நேற்று மாலை கனமழையையும் பொருட்படுத்தாமல் தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருந்தனர். வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக வரும் 29ம் தேதி மாலை நடை திறக்கப்படும். மறுநாள் (30ம் தேதி) நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது.