Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி திருவாதிரை விழாவுக்கு 27ம் தேதி வருகை திருச்சியில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ் சந்திப்பு..? முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்பு

திருச்சி: தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்து விட்டு, தூத்துக்குடிக்கு வரும் 26ம் தேதி வர உள்ளார். தொடர்ந்து, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதையடுத்து, அவர் இரவு திருச்சிக்கு வருகிறார். 27ம் தேதி காலை பிரதமர் மோடி, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு, ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி தரப்பில் இருந்து நேரம் கேட்க உள்ளதாகவும், முக்கிய நிர்வாகிகளுடன் அவர் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது. சென்னையில் நடந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக-பாஜ இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்கொள்ளும் என்றும், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி தேர்தலை எதிர்கொள்ளும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூட்டணி பற்றி கவலையில்லை, ஆட்சியில் பங்கு தர நான் ஏமாளி அல்ல என பேசியது, பாஜவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாஜவை சேர்ந்த சிலர், ஆட்சியில் பங்கு என்று கூறி வருகின்றனர். ஆனால், அதிமுக அதை மறுத்து வருகிறது. இந்நிலையில், திருச்சி வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி நேரம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்க உள்ளாராம். அதிமுக- பாஜ கூட்டணிக்கு பிறகு, பிரதமர் மோடி எடப்பாடி பழனிசாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது.

சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்பிஜி) நேற்று திருச்சி வந்தனர். அவர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, திருச்சியில் பிரதமர் மோடி தங்க உள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்டுள்ள விமான நிலையத்தை 26ம் திறந்து வைக்கிறார். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி விமான நிலைய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை பிரிவான ‘எஸ்பிஜி’ குழுவினர் தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பிரதமர் வந்து செல்லும் பகுதிகள் ஆகியவற்றை இன்று ஆய்வு செய்கின்றனர்.

திருவாதிரை விழா இன்று துவக்கம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில், இந்தாண்டு ஆடி திருவாதிரை விழா இன்று (23ம்தேதி) தொடங்குகிறது. இது முப்பெரும் விழாவாக ஒரு வாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த துவக்க விழாவையொட்டி பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடக்கிறது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தங்கம் தென்னரசு, சாமிநாதன், ராஜேந்திரன், சிவசங்கர் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன், எம்எல்ஏ கண்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.