பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், ஆனைமலை, அம்பாராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, மணக்கடவு வழியாக கேரள பகுதிக்கு செல்கிறது.இந்த ஆற்றங்கரையோரம் அவ்வப்போது, சிலர் தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று, ஆடி அமாவாசை என்பதால், ஆழியாற்றங்கரையில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர் நினைவாக தர்ப்பணம்,திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.
இறந்த தங்கள் முன்னோரை நினைத்து பூஜையில் கலந்து கொண்டதுடன், பூஜையில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஆழியாற்று நீரில் கரைத்து விட்டனர். அதுபோல், ஆத்துப்பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், ஆழியாற்றங்கரையோரம் ஏராளமானோர் , தங்களின் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.
நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 1500க்கும் மேற்பட்டார், தர்ப்பணம் செய்தனர். இதனால், அப்பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போககுவரத்து பாதிக்கப்பட்டது.