வேலூர்: ஆதார், பான்கார்டை தவறாக பயன்படுத்தி ஆரணியில் ஏற்றுமதி நிறுவனம் பெயரில் ரூ.1.50 கோடி நிலுவை ஜிஎஸ்டி தொகை கட்ட கோரி சம்மன் அனுப்பியது தொடர்பாக வேலூர் எஸ்பி அலுவலகத்தில் இளம்பெண் மனு அளித்தார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஏடிஎஸ்பி அண்ணாதுரை தலைமையில் நேற்று நடந்தது. இதில் குடியாத்தம் பகுதியை சேர்ந்த 30வயது இளம்பெண் கொடுத்த மனுவில்
கூறியிருப்பதாவது: சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து, ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை செலுத்த வேண்டும் என சம்மன் வந்தது. உடனே சென்னைக்கு சென்று ஜிஎஸ்டி அலுவலத்தில் கேட்டபோது, எனது ஆதார் அட்ைட, பான்கார்டு ஆகியவற்றை பயன்படுத்தி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் எனது பெயரில் ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருவதும், ரூ.1.50 கோடி ஜிஎஸ்டி தொகை நிலுவையில் இருப்பதாகவும், அந்த தொகையை உடனே செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். எனக்கும், அந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது அடையாள அட்டைகளை பயன்படுத்தி எனக்கு தெரியாமல் யாரோ நிறுவனம் தொடங்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.