திருவள்ளூர்: ஆதார் கார்டு இல்லாததால் பள்ளி மாணவனை வெளியே பூவிருந்தவல்லி அரசு நடுநிலைப்பள்ளி அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூவிருந்தவல்லி வட்டம் அம்மா நகர் பழங்குடி நரிக்குறவர் வகுப்பை சேர்ந்த சிவகுமார் ராதிகா தம்பதியரின் மகன் சந்தோஷ் 7ம் வகுப்பு படித்து வரும் நிலையில் ஆதார் கார்டு இல்லாமல் தற்போது கல்வி கற்க முடியாது. பள்ளியில் வர ஆதார் கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம் கோயம்பேட்டில் உள்ள ஆதார் அலுவலகம் என அலைந்து திரிந்து ஆதார் அட்டை கிடைக்க பெறாமல் மனமுடைந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இன்று மனு அளித்தார் .
இந்த சம்பவத்தால் மனமுடைந்த பள்ளி மாணவன் சந்தோஷ் தனது பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரிடம் தனக்கு ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் வைத்து மனு அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில்; பிறப்பு சான்றிதழ் இல்லாததால் தனக்கு ஆதார் அட்டை எடுக்க முடியவில்லை. இதனால் கல்வி கற்க இயலவில்லை. உதவி செய்யுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தது அனைவரையும் கண்கலங்க செய்தது.