Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆதார் சேவைகளை பொதுமக்களுக்கு அளித்திட 50 புதிய நிரந்தர சேவை மையங்கள்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார்

சென்னை: எல்காட் நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 50 புதிய நிரந்தர ஆதார் சேவை மையங்களையும் 79 பள்ளி முகாம்களையும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதன்மூலம் எல்காட் மற்றும் அரசு கேபிள் டிவி நிறுவனங்களால் நடத்தப்படும் நிரந்தர ஆதார் சேவை மையங்களின் மையங்களின் எண்ணிக்கை 587ல் இருந்து 637 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் 266 நிரந்தர ஆதார் மையங்களுடன் தற்போது தொடங்கப்பட்டுள்ள 50 மையங்களையும் சேர்த்து மொத்தம் 316 மையங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்துகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 321 மையங்களை நடத்துகிறது. புதிய ஆதார் பதிவு, பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் திருத்தம், கருவிழி மற்றும் கைரேகை பதிவு மற்றும் புதுப்பித்தல், ஆவணங்கள், புகைப்படங்கள் பதிவு உள்ளிடட அனைத்து சேவைகளும் இம்மையங்களில் வழங்கப்படுகின்றன. யுஐடிஏஐ சார்பில் விண்ணப்பங்கள் பெற்று பதிவேற்றம் செய்யும் சேவைகளை இம்மையங்கள் வழங்குகின்றன. விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல், ஏற்பளித்தல் மற்றும் நிராகரித்தல் பணிகளை யுஐடிஏஐ மேற்கொள்கிறது. இம்மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். அத்துடன், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களின் ஆதார் பதிவு கைரேகை பதிவு புதுப்பித்தல் மேற்கொள்ள, 16 மாவட்டங்களில் 79 முகாம்கள் தொடக்கி வைக்கப்படடன.

முதற்கட்டமாக சென்னை, மதுரை, திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் உதகை ஆகிய மாவட்டங்களில் தினமும் 79 சிறப்பு முகாம் நடத்தப்படும். யுஐடிஏஐ இடம் இருந்து 300 கூடுதல் ஆதார் பதிவு உபகரணங்கள் பெறவும், ஆதார் பதிவு செய்யாத மற்றும் புதுப்பிக்காத மாணவர்கள் பட்டியலை பள்ளிக் கல்வித்துறையிடம் பள்ளிகள் வாரியாக பெற்று, மேலும் 300 முகாம்களை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளில் டிசம்பர் முதல் படிப்படியாக நடத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி முகாம் விவரங்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்.