Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ராசிபுரம் அம்மன் கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விழாவில் 230 கிடாக்கள் வெட்டி கறிவிருந்து: விடிய விடிய நடந்தது

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, பொங்கலாயி அம்மன் கோயிலில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழா நடந்தது. இதில் நேர்த்திக்கடனுக்காக விடப்பட்ட 230 கிடாக்களை பலியிட்டு கறி விருந்து வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள மலையாம்பட்டி கிராமத்தில் மிகவும் சக்திவாய்ந்த மலையாள தெய்வம் பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில் போதமலையை சேர்ந்த மலையாள பூசாரி நள்ளிரவில் சுவாமிக்கு பூஜை, அபிஷேகம் செய்தார். தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட கிடாக்களை பலியிட்டனர்.

முன்னதாக பொங்கலாயி அம்மனுக்கு பெண் ஆட்டினை பலியிட்டு படையல் செய்த பின்பு, கிடாக்கள் வெட்டி சமபந்தி விருந்தினை ஏற்பாடு செய்தனர். இந்த விழாவில் ஆண்கள் மற்றும் சிறு குழந்தைகள் மட்டுமே பங்கேற்றனர். பூஜைகள் முடிந்த பின்னர் ஆண்கள் மட்டும் நீண்ட வரிசையில் நின்று சமபந்தி கிடா விருந்து சாப்பிட்டனர். இந்த விழாவில் சென்னை, நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த விருந்து விடிய விடிய நடந்தது. இன்று மதியம் வரை விருந்து நடைபெற்றது.

மொத்தம் 230கிடாக்களை வெட்டி விருந்து பரிமாறப்பட்டது. வேண்டுதலுக்காக வாங்கி கொடுக்கப்படும், கிடாக்கள் கோயில் வளாகத்திலேயே சாமிக்கு பலி கொடுக்கப்பட்டு, அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்குவதும், இதனை ஆண்கள் மட்டுமே சாப்பிடுவதும் 100 ஆண்டுகள் மேலாக கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.