Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு கரும்புள்ளி

அமெரிக்காவில் குடியேற்றம் தொடர்பான தனது கொள்கையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இறுக்கமூட்டியுள்ளார் டிரம்ப். அதாவது அமெரிக்காவில் குடியேற விசா கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சுகாதார தகுதி சார்ந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீரிழிவுநோய், இருதயநோய், உடல்பருமன் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்கள், அமெரிக்க விசாக்களை பெறுவதில் இருந்து இனி நிராகரிக்கப்படுவார்கள் என்பது புதிய விவாதமாகியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வெளியுறவுத்துறை உத்தரவு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ‘‘இனி பரந்த அளவிலான, நாள்பட்ட அல்லது அதிக செலவு ஏற்படுத்தக்கூடிய மருத்துவநிலைகளை விசா தகுதியின்மைக்கு சாத்தியமான அடிப்படையாக கருத வேண்டும். இருதயநோய்கள், சுவாச, நரம்பியல் மற்றும் மனநலக்கோளாறுகள், நீரிழிவு மற்றும் அதுசார்ந்த அனைத்து நோய்களும் இதற்கு பொருந்தும்,’’ என்று தெரிவித்துள்ளது. ‘‘அமெரிக்க அரசாங்கத்திற்கு பொதுச்சுமையாக மாறக்கூடிய குடியேறிகளை நாட்டுக்குள் நுழைய விடாமல் தடுப்பதே இதன்நோக்கம்’’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ‘‘விண்ணப்பதாரர்கள் தாங்கள் எதிர்பார்க்கும் முழுஆயுள் காலத்திற்கும், பொது உதவியை நாடாமல் மருத்துவ செலவுகளை ஈடுசெய்வதற்கு போதுமான நிதி ஆதாரங்களை கொண்டவர்களா? என்பதை மதிப்பிட வேண்டும்’’ என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாள்பட்ட நோய் பாதிப்பு கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்குள் நுழைவதை அமெரிக்கா, ஒரு பொதுச்சுமையாக கருதுகிறது. அதேநேரத்தில் பொதுஉதவியை நாடாமல் மருத்துவ செலவுகளை செய்வதற்கு தகுதி கொண்டவர் என்றால் பரிசீலிப்பதில் முரண்பாடு உள்ளது.

இது எதிர்காலத்தில் மிகப்பெரும் செல்வந்தர்கள் மட்டுமே அமெரிக்காவில் நுழைய முடியும் என்ற நிலைக்கு வழிவகுக்கும் என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள். அமெரிக்காவின் இந்த புதிய விதிமுறை என்பது இதுவரை இல்லாத ஒன்றாக உள்ளது. முன்பு காசநோய் போன்ற தொற்று நோய்களை சரிபார்ப்பது மற்றும் தடுப்பூசி இணக்கத்தை உறுதி செய்வது மட்டுமே விசா வழங்கல் பரிசோதனைகளில் முக்கிய நோக்கமாக இருந்தது. ஆனால் முற்றிலும் மாறுபட்ட இந்த விதி என்பது, அமெரிக்காவின் அடுத்தடுத்த மேம்பாட்டிற்கு பெரும் தடைக்கல்லாக அமையும்.

மருத்துவ பயிற்சி பெறாத விசாஅதிகாரிகள், நீண்டகால ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலை குறித்து தனிப்பட்ட அனுமானங்களின் அடிப்படையில் முடிவு எடுப்பார்கள். இதுபோன்ற அதிகப்படியான அதிகாரம், இதரநாட்டு தனித்திறனாளர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு பெரும்சிரமங்களை உருவாக்கும். இதுநாட்டின் வளர்ச்சி வேகத்தை குறைத்துவிடும் என்பது உள்நாட்டு பிரதிநிதிகளின் குமுறல். இது ஒருபுறமிருக்க, ‘‘உலகளவில் பத்தில் ஒரு பங்கு மக்கள் நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அளவுகோல்கள் மில்லியன் கணக்கான சாத்தியம் நிறைந்த விண்ணப்பதாரர்களை தகுதி இழக்கச்செய்யும். நாள்பட்ட நோயை விசாவுக்கான தகுதிஇழப்பு என்ற நிலையில் அமெரிக்கா வைப்பது அந்த நாட்டின் உரிமை. ஆனால் அங்கு நுழைவதற்கு யார் தகுதியானவர்கள்? என்பது குறித்து தீவிர நெறிமுறைகள் ஏதுமில்லை என்பது விசித்திரமானது. மொத்தத்தில் நாள்பட்ட நோயை காரணம் காட்டி மனிதர்களை நாட்டிற்குள் நுழைய தடைவிதித்துள்ளது அமெரிக்கா. இதன்மூலம் மனிதநேயம் என்ற சொல்லின் மீது ஒரு கரும்புள்ளி வைத்துள்ளார் டிரம்ப் என்பதே நிதர்சனம்.