ஜெகதீஷ் சந்திரபோஸ்
தாவரவியல் மற்றும் இயற்பியல் என இரு துறைகளிலும் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு செய்தவர் இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ். இவர் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வங்காள மாநிலத்தின் மைமென்சிங்கில் பெங்காலி காயஸ்தா குடும்பத்தில் பாமா சுந்தரி போஸ் மற்றும் பகவான் சந்திர போஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை பிரம்ம சமாஜத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தார். ஃபரித்பூர் மற்றும் பர்தமான் உட்பட பல இடங்களில் போஸின் தந்தை ஜெகதீஷ் சந்திர போஸை அவரது ஆரம்பக் கல்விக்காக பெங்காலி மொழிப் பள்ளிக்கு அனுப்பினார். ஏனெனில் அவரது மகன் ஆங்கிலத்தில் படிப்பதற்கு முன்பு அவரது தாய்மொழி மற்றும் கலாசாரத்தை படிக்க வேண்டியது அவசியம் என அவர் கருதினார். போஸ் 1869இல் கொல்கத்தாவில் உள்ள ஹரே பள்ளியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து டாக்காவில் உள்ள எஸ்எஃப்எக்ஸ் கிரீன்ஹெரால்டு இன்டர்நேஷனல் பள்ளியில் சேர்ந்தார்.
1875இல், அவர் டாக்கா பல்கலைக்கழகத்தின் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்று மொஹமுத்பூரில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் இயற்கை அறிவியலில் தனது ஆர்வத்தை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்த ஜேசுட் தந்தை யூஜின் லாபோண்ட் என்பவரை சந்தித்தார். போஸ் 1879இல் டாக்கா பல் கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்றார்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரது மைத்துனரும் முதல் இந்திய ரேங்லருமான ஆனந்தமோகன் போஸின் பரிந்துரையின் மூலம் போஸ் கேம்பிரிட்ஜில் உள்ள கிறிஸ்ட் கல்லூரியில் இயற்கை அறிவியல் படிப்பதற்காக அனுமதி பெற்றார். 1884இல் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் BA (இயற்கை அறிவியல் டிரிபோஸ்) மற்றும் 1883இல் லண்டன் பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் BSc பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு போஸ் இந்தியா திரும்பினார். ஹென்றி ஃபாசெட் என்பவர் போஸுக்கு இந்தியாவின் வைஸ்ராய் லார்ட் ரிப்பனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஜெ.சி.போஸை கொல்கத்தாவில் உள்ள பொதுக்கல்வி இயக்குநருக்கு பரிந்துரைத்தார். அதிபர் சார்லஸ் ஹென்றி டவ்னி மற்றும் கல்வி இயக்குனர் ஆல்ஃபிரட் உட்லி கிராஃப்ட் ஆகியோர் அவரை நியமிக்கத் தயக்கம் காட்டினாலும், போஸ் ஜனவரி 1885இல் மாநிலக் கல்லூரியின் பேராசிரியராகப் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால், ஊதியத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அதனால் அவர்கள் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்று அப்போது காரணம் கூறப்பட்டது. ஆனால், போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார். திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு, ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது. அவ்வாறு தரப்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டு போஸ் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவி, அங்கு தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.
அறிவியலுக்கு ஜெகதீஷ் சந்திரபோஸின் பங்களிப்பு:
அவர் ரேடியோ அறிவியலின் தந்தையாகக் கருதப்படுகிறார். மேலும் 1894ஆம் ஆண்டில் ரேடியோ சிக்னல்களைக்கண்டறிய குறைக்கடத்தி சந்திப்புகளைப் பயன்படுத்திய முதல் நபர் ஆவார். பல்வேறு தூண்டுதல்களுக்கு தாவரங்களின் பதிலை அளவிடும் கருவியான கிரெஸ்கோகிராஃப் உட்பட பல கருவிகளை அவர் உருவாக்கினார்.
1893 முதல் வயர்லெஸ் தந்தி துறையில் பணியாற்றினார். மின்காந்த அலைகள் ஒளியின் வேகத்தில் விண்வெளியில் பயணிக்க முடியும் என்று அவர் நம்பினார். 1895ஆம் ஆண்டில், அவர் தனது கண்டுபிடிப்புகள் குறித்து வங்காள ஆசிய சங்கத்திற்கு ஒரு கட்டுரையை அனுப்பினார். ‘‘தாவரங்களின் மின் மறுமொழி’’என்ற அவரது கட்டுரை 1895ஆம் ஆண்டில் அறிவியல் கருவிகள் இதழில் வெளியிடப்பட்டது. மேலும் அது மின் தூண்டுதல்களைப் பயன்படுத்தி தாவரங்கள் குறித்த அவரது சில சோதனைகளைப் பற்றி விவாதித்தது.
கிரெஸ்கோகிராஃப் :
தாவரங்களின் வளர்ச்சியை அளவிடப் பயன்படும் கிரெஸ்கோகிராஃப் என்னும் கருவியை இவர் கண்டுபிடித்தார். தாவரங்கள் குறித்த அவரது பணி, தாவரங்கள் வெளிப்புற தூண்டுதல்களுக்கு பதிலளிக்கும் திறன் கொண்டவை என்ற முடிவுக்கு அவரை இட்டுச் சென்றது. இதனால், அனைத்து உயிரினங்களுக்கும் ஒளி, வெப்பம் போன்ற வெளிப்புறத் தூண்டுதல்களுக்கு பதிலளிக்க உதவும் சில உயிர் சக்தி இருப்பதை அவரால் நிரூபிக்க முடிந்தது. இந்த சோதனை சார்லஸ் டார்வின், ராபர்ட் ஹூக் போன்ற பிற ஆராய்ச்சியாளர்கள் தாவர உணர்வுகள் பற்றிய மேலும் ஆய்வு செய்ய வழிவகுத்தது.
படிகக் கண்டுபிடிப்பான்
டிரான்ஸ்மீட்டரிலிருந்து சுமார் 60 மீட்டர் தொலைவில் இருந்து கம்பிகள் அல்லது ஆண்டெனாக்கள் இல்லாமல் சிக்னல்களைப் பெறக்கூடிய ரேடியோ ரிசீவரின் ஆரம்ப பதிப்பான கிரிஸ்டல் டிடெக்டரை போஸ் கண்டுபிடித்தார். கேபிள்கள் அல்லது ஆண்டெனாக்கள் இல்லாமல் நீர்வழியாகச் செய்திகளை அனுப்ப முடியும் என்பதால், முதலாம் உலகப் போரின்போது கப்பல்களுக்கு இடையேயான தகவல்தொடர்புக்கு இது பயனுள்ளதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின்போது வீரர்களும் இதைப் பயன்படுத்தினர்.
போஸ் இரண்டு புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். ‘உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றில் எதிர்வினை’ (1902) மற்றும் ‘தாவரங்களின் நரம்பு வழிமுறை’ (1926). ரேடியோ அலைகளின் நடத்தை குறித்தும் அவர் விரிவாக ஆராய்ச்சி செய்தார். பெரும்பாலும் தாவர உடலியல் நிபுணர் என்று அறியப்பட்ட அவர் உண்மையில் ஒரு இயற்பியலாளர் ஆவார். ரேடியோ அலைகளைக் கண்டறிவதற்காக ‘கோஹரர்’ என்ற மற்றொரு கருவியில் போஸ் மேம்பாடுகளைச் செய்தார்.
1917ஆம் ஆண்டு அவருக்கு நைட் பேச்சலர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. மேலும் அவரது சிறப்பான சாதனைகளுக்காக 1920ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியின் ஃபெலோவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 1937ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி இந்தியாவின் கிரிதியில் 78 வயதில் இயற்கை எய்தினார்.
- இரத்தின. புகழேந்தி



