டெல்லியில் ஓயாத பழிவாங்கும் படலம்; இளைஞரை சுட்டுக்கொன்ற ரவுடி கும்பல்: சமூக வலைதளத்தில் பகிரங்க அறிவிப்பு
புதுடெல்லி: டெல்லியில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு, பிரபல ரவுடிக் கும்பல் சமூக வலைதளம் மூலம் பொறுப்பேற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் பிரபல ரவுடிக் கும்பல்களான இர்ஃபான் சீனு மற்றும் ஹசிம் பாபா கும்பல்களுக்கு இடையே நீண்டகாலமாக பனிப்போர் நிலவி வருகிறது. தங்களுக்குள் ஆதிக்கம் செலுத்துவதில் ஏற்படும் போட்டியால், இரு கும்பல்களும் அடிக்கடி மோதிக் கொள்வதும், பழிக்குப் பழியாக கொலை சம்பவங்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.
திஹார் சிறையில் இர்ஃபான் சீனு அடைக்கப்பட்டிருந்தாலும், அவரது கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுப்பதையும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு டெல்லியின் சீலம்பூர் பகுதியைச் சேர்ந்த மிஸ்பா (22) என்ற இளைஞர் கடந்த வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஹசிம் பாபா கும்பலைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இந்த கொலை நடந்த சில மணி நேரங்களிலேயே, இர்ஃபான் சீனு கும்பல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, இந்த கொலைக்கு பகிரங்கமாக பொறுப்பேற்றது.
இந்த பகிரங்க அறிவிப்பு, இரு கும்பல்களுக்கும் இடையே முற்றியுள்ள மோதலை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகக் கருதும் டெல்லி காவல்துறை, இதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக, இர்ஃபான் சீனு கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் அப்துல்லா மற்றும் பிரின்ஸ் காசி ஆகிய இரு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
   