Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஏடிஎம் மெஷினில் இரும்பு தகடு வைத்து நூதன முறையில் பணம் கொள்ளையடிப்பு: வடமாநில வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை முகப்பேர் பாரிசாலையில் உள்ள ஒரு தனியார் ஏடிஎம்மில் வேளச்சேரி பகுதியை சேர்ந்தசீனிவாசன்(39) என்பவர் பணம் எடுப்பதற்கு முன்பாகவே பணம் எடுத்த மாதிரி அவரது செல்போனுக்கு மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மற்றொரு நபர் வந்து தனது ஏடிஎம் கார்டை மெஷினில் செலுத்தி பணம் எடுப்பதற்கு முன்பே அவரது செல்போனில் பணம் எடுத்துவிட்டதாக மெசேஜ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து சீனிவாசன், ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்த சிலர், பணம் வரவில்லை. ஆனால் பணம் எடுத்துவிட்டதாக செல்போனுக்கு தகவல் வருகிறது. என்னவென்று தெரியவில்லை. மெஷினில் ஏதாவது பிரச்னையா’ என்று புலம்பியபடி சென்றுள்ளனர். இதை கவனித்த வங்கி அருகே மளிகை கடை நடத்திவரும் சந்திரசேகர் என்பவர் உடனடியாக வங்கி அதிகாரிக்கு தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். அப்போது அதிகாரிகள் கேட்டுக்கொண்டதன்பேரில் சந்திரசேகர் சென்று, ஏடிஎம் முழுவதும் போட்டோ எடுத்து அவற்றை போலீசாருக்கு சந்திரசேகர் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த போட்டோவை அதிகாரி பார்த்தபோது ஏடிஎம் மெஷினில் பணம் வரும் வழியில் இரும்பு தகடு வைத்து தடுத்திருப்பது தெரிந்ததும் திடுக்கிட்டார். இதையடுத்து வங்கி தரப்பில் இருந்து ஜெ.ஜெ.நகர் குற்றப்பிரிவு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடனடியாக இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அப்போது ஏடிஎம் பகுதியில் இருந்து சிலர் ஓட்டம் பிடித்தனர். ஆனால் போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை பிடித்து விசாரித்தபோது அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா(20) என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏடிஎம்மில் நூதனமுறையில் பணம் கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.

போலீசாரிடம் சிவா கூறியதாவது;

உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சென்னை ஆகிய இடங்களில் உள்ள ஏடிஎம்மில் பணம் வரும் வழியில் இரும்பு தகடுகளை வைத்துவிட்டு வெளியே காத்திருப்போம். யாராவது பணம் எடுத்துவிட்டு பணம் வரவில்லை என்று சென்றுவிடுவார்கள். இதன்பிறகு நாங்கள் சென்று அந்த இரும்பு தகட்டை அகற்றிவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வைத்துவிடுவோம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிவா மீது வழக்குபதிவு செய்து அவரிடம் இருந்து 2 ஆயிரம் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய 30 செ.மீ நீள இரும்பு தகடு ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். சிவா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பின்னால் உள்ள கும்பலை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.