பள்ளி மாணவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் புதிய திட்டம்
ஒரு மாணவனின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்கு, அந்த மாணவனின் வகுப்பறைக் கற்றல் அனுபவங்களும், கல்வி இணைச் செயல்பாடுகள் மற்றும் கல்வி சாரா செயல்பாடுகளில் மாணவனின் சிறப்பான பங்களிப்பும் காரணமாக அமைகிறது. இதன்படி 2024-2025ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் குழு (HOUSE SYSTEM) அமைப்பினை ‘மகிழ் முற்றம்’ என்கிற பெயரில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மகிழ் முற்றம் திட்டத்தில் அனைத்து மாணவர்களும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு மாணவத் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தெரிவுசெய்யப்படுவர். இதன் மூலம் மாணவர்களிடையே அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமைத் திறன் மேம்பட மாதிரி சட்டப்பேரவை மற்றும் மாதிரி பாராளுமன்றம் நடத்தப்படும்.
மகிழ் முற்றம் உருவாக்கப்பட்டதின் காரணம்
குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு, இது தவிர விளையாட்டு நடவடிக்கைகளுக்கு அப்பால் சமூக உணர்வை ஊக்குவிப்பதற்கும், குழுப் பணியை வளர்ப்பதற்கும், பல்வேறு கல்வி மற்றும் கல்வி சாரா இணைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்களிடம் தலைமைப் பண்பை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகிழ்ச்சியான பள்ளிச் சூழல் உருவாகும்.
மகிழ் முற்றம் திட்டத்தின் நோக்கங்கள்
கற்றல் திறன் மேம்பாடு, மாணவர்களின் ஊக்கம் மற்றும் பங்களிப்பை அதிகரித்தல், மாணவர்கள் விடுப்பு எடுப்பதைக் குறைத்தல், ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை உருவாக்குதல், அனைத்து மாணவர்களுக்குமான வாய்ப்புகள், நேர்மறை எண்ணங்கள் மற்றும் நடத்தைகளை வலுவூட்டுதல், தலைமைத்துவப் பண்பை வளர்த்தல், ஆசிரியர் மாணவர் உறவை மேம்படுத்துதல் போன்றவையே மகிழ் முற்றம் திட்டத்தின் நோக்கமாகும்.
அமைப்பு முறையும் குழுக்களும்
இந்த திட்டத்தில் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படுவார்கள். ஐந்திணை நிலங்கள் பெயர் இந்த குழுக்களுக்குச் சூட்டப்படும். மேலும் இக்குழுக்களுக்குப் பொருத்தமான வர்ணம் (HOUSE COLOR) வழங்கப் படும். அதன்படி குறிஞ்சி - சிவப்பு, முல்லை - மஞ்சள், மருதம் - பச்சை, நெய்தல் - நீலம், பாலை - வெள்ளை என வழங்கப்படும். இக்குழு அமைப்பில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இடம்பெறுவர். ஒவ்வொரு வகுப்பிலும் பயிலும் மாணவர்கள் இந்த ஐந்து குழுக்களிலும் இடம்பெறும் வகையில் பிரிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு குழு ஒதுக்கப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குழுவில் இரண்டு ஆண்டுகள் இருப்பார்கள்.
பள்ளி மாணவத் தலைவன் (HOUSE CAPTAIN)
ஒவ்வொரு பள்ளியிலும் அப்பள்ளியின் உயர் வகுப்பு பயிலும் மாணவர்களுள், ஒவ்வொரு மாணவர் குழுவிற்கும் 2 தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இம் மாணவத் தலைவர் தேர்வு செய்யப்படுவது குலுக்கல் முறையில் நடைபெறும். இருபாலர் பள்ளி எனில் ஒரு மாணவத் தலைவன் ஒரு மாணவத் தலைவி தேர்ந்தெடுத்தல் வேண்டும்.
வகுப்பு வாரியாகத் தலைவர் (HOUSE LEADER)
ஒவ்வொரு வகுப்பிலும் மற்றும் வகுப்புப் பிரிவிலும் ஒவ்வொரு குழுவிற்குமான வகுப்புத் தலைவர் நியமிக்கப்படுவார். குலுக்கல் முறையில் மேற்கண்ட வாறு இந்தத் தேர்வுமுறை இருக்கும்.
பொறுப்பு ஆசிரியர் தேர்வு
ஐந்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளில் 1 ஆசிரியர் மகிழ் முற்றம் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளராக (HOUSE SYSTEM INCHARGE TEACHER) இருத்தல் வேண்டும். மற்ற ஆசிரியர்களுக்கான குழு குலுக்கல் முறையில் ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு பொறுப்பு ஆசிரியர் (HOUSE HEAD TEACHER)நியமிக்கப்படுவார்.
பதவியேற்பு விழா
ஒவ்வொரு குழுவிற்குமான மாணவர் தலைவர்கள், வகுப்புத் தலைவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், குழுவிற்கான பொறுப்பு ஆசிரியர்கள் ஆகியோருக்கான பதவியேற்பு விழா வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தேசியக் குழந்தைகள் தினத்தன்று நடைபெறும்.
மதிப்பீடு
பள்ளியளவில் நடைபெறும் பல்வேறு செயல்பாடுகளில் மாணவர்கள் பங்கேற்பு கணக்கிடப்பட்டு மாத இறுதியில் அதிக புள்ளிகள் பெறும் குழுவானது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி குழுவிற்கான வண்ணக்கொடி (HOUSE COLOR) பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரின் பார்வைக்கும் அந்த மாதம் முழுவதும் காட்சிப்படுத்தப்படும்.
எமிஸ் தளத்தின் வழி எடுத்துக்கொள்ளப்பட்ட செயல்பாடுகளுக்கான புள்ளிகளுடன் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் மற்றும் HOUSE HEAD TEACHER சேர்ந்து தீர்மானிக்கும் செயல்பாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கலாம். நேரம் தவறாமை, வழிபாட்டுக் கூட்டத்தில் பங்கேற்றல், வீட்டுப்பாடம் முடித்தல், வகுப்பறைத் தூய்மை போன்ற செயல்பாடுகளுக்கு அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர் முடிவு செய்து புள்ளிகள் வழங்கலாம்.
வழிகாட்டுதல் குழு
மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் அடங்கிய குழு மாவட்ட அளவிலான மகிழ் முற்றம் மன்றங்களை வழிநடத்திச் செல்லும்.
மகிழ் முற்றம் திட்டச் செயல்பாடுகள்
ஜனநாயகத்தின் ஆணிவேராகவும் அடிநாதமாகவும் திகழும் சட்டமன்ற, பாராளுமன்ற நடைமுறைகளை இளம் வயதிலேயே கற்றுத் தெளிவுறும் வகையில் மன்றச் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெறுதல் வேண்டும். ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றியக் கூட்டங்களைப் பார்வையிடும் செயல்பாடுகளும் இந்த முற்றங்களுக்கு வலுசேர்க்கும்.
இந்த அமைப்பில் மாணவர்கள் பங்கேற்பதால், தலைமைப் பண்புகளைப் பெறுவதுடன் பொதுஅறிவை மேம்படுத்திக்கொள்ளவும், மக்கள் பிரதிநிதிகள் எவ்வாறு செயல்படுகின்றனர், சட்டப்பேரவை, நாடாளுமன்ற நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் முழுமையான அளவில் தெரிந்துகொள்ளமுடியும். இந்த மகிழ் முற்றம் அமைப்பில் பயிற்சி பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் தரமான மக்கள் பிரதி நிதிகளாக அவர்கள் செயலாற்றமுடியும். ஜனநாயகத்தை வலுவானதாகச் செயல்படுத்த இளம்வயதிலேயே பயிற்சி பெறும் பாசறையாக இந்த அமைப்புகள் திகழும் என்பதில் ஐயமில்லை. பள்ளிதோறும் மகிழ் முற்றம் அமைத்திடுவோம். ஜனநாயக விழுதுகளை வலு(ள)ப்படுத்துவோம்!