Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

உயிரோட்டமான ஓவியங்களை வரையும் மாற்றுத்திறனாளி பெண்!

சாதனைகளைப் படைக்கவும், குறிக்கோளை அடையவும் ஊனம் ஒரு தடையில்லை என்பதற்குச் சான்றாக உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் மாற்றுத்திறனாளி பெண் ஓவியர் தனலட்சுமி.

விழுப்புரத்தின் நகரப் பகுதியான வழுதரெட்டி பார்த்தசாரதி நகர்ப் பகுதியில் வசிக்கும் காது கேளாத, வாய் சரியாகப் பேச முடியாத, உடல் பாதிப்புகளோடு மாற்றுத்திறனாளியாக உள்ள தனலட்சுமி(43) தனது சகோதரரின் அரவணைப்பில் வசித்து வருகிறார். சிறுவயது முதல் போதிய கல்வி அறிவை பெறமுடியாத தனலட்சுமி சகோதரர் மற்றும் தனது தந்தையின் உதவியோடு கல்வி அறிவைப் பெற்ற இவர் ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். தன் மனதில் தோன்றியவற்றை ஓவியங்களாக்கும் முயற்சியைத் தனது 23 வயதில் ஆரம்பித்த தனலட்சுமி எந்தவித பயிற்சியும் இல்லாமல் உத்வேகத்துடன் தத்ரூபமான ஓவியங்களைத் தானாகவே வரையக் கற்றுக்கொண்டுள்ளார். மனதில் தோன்றியவற்றுக்கு தூரிகையின் உதவியோடு காகிதத்தில் வடிவம் தந்து பல்வேறு ஓவியங்களை வரைந்துள்ளார். அதிக நேரம் உட்கார்ந்து வரைய உடல் ஒத்துழைப்பு தராவிட்டாலும் சில மணி நேரம் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், காண்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் விதமாக ஓவியர் ரவிவர்மாவின் ஓவியங்களைப் போல் வரைந்து அசத்திவருகிறார்.

ஓவியத்தின் மீது தனக்குள்ள ஆர்வம் பற்றி தனலட்சுமி கூறும்போது, ‘‘நாம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் உடல் ஊனம் என்பது ஒரு தடையே இல்லை. எனது ஓவியங்கள் ரவிவர்மாவின் ஓவியம் போன்று மக்களால் பாராட்டப்பட வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்கு நான் வரைந்துள்ள ஓவியங்களைக் காட்சிப் படுத்தி மக்களுக்கு வெளிப்படுத்த உதவ வேண்டுமென’’ தனலட்சுமி தெரிவித்தார்.

ஓவியராக உள்ள தனலட்சுமி மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நாளிதழ்கள் படித்து அதற்கான அர்த்தங்களை, வெளிஉலக நிகழ்வுகளைச் சகோதரர், சகோதரிகள் மூலம் கேட்டுத் தெரிந்து கொண்டு தன் பொது அறிவை மேம்படுத்திக்கொள்கிறார். எல்லாவற்றுக்கும் பிறர் உதவியை எதிர்பார்க்காமல், தனக்குத் தேவையானவற்றை ஆன்லைனில் தேடி பெற்றுக் கொள்கிறார். உயிரோட்டமான ஓவியங்களை வரைவதோடு மட்டுமல்லாமல் கவிதைகளையும் எழுதி தனக்குள் ஒளிந்துகிடக்கும் தனித்திறனை வெளிப் படுத்தி படைப்பாளியாகத் திகழ்கிறார். இவரது தத்துரூபமான ஓவியங்களைப் பார்த்தவர்கள் தங்கள் புகைப்படங்களைப் கொடுத்து வரைந்து கொடுக்கச் சொல்லி வாங்கி செல்கின்றனர். இயற்கை காட்சிகள், கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமான பெண் ஓவியங்கள், குழந்தைகள் எனப் பல ஓவியங்களைப் பல வண்ணங்களில் தீட்டியுள்ளார். ஓவியங்கள் மூலமாகத் தான் யார் என்பதை உலகிற்குக் காட்டவேண்டும் என்பதையே ஒரே லட்சியமாக கொண்டு தனலட்சுமி செயல்படுவதாக அவரது சகோதரர் கோபாலகிருஷ்ணன் கூறுகிறார். தான் ஒரு மாற்றுத்திறனாளி என்றாலும் தன் நிலையை மாற்றிக்கொள்வதற்கான திறனாளியாக உயிரோட்டமான ஓவியங்களை வரைந்து நம் முன் உயர்ந்து நிற்கிறார் தனலட்சுமி. அவரின் திறமையை நாமும் பாராட்டி அவரின் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்போம்!

- ஆனந்த் ஜெயராமன்