மீஞ்சூர் அடுத்த வாயலூர் பகுதியில் அனல்மின் திட்ட கட்டுமான பணியில் சாரம் சரிந்து 9 தொழிலாளர்கள் பலி: 5க்கும் மேற்பட்டோர் படுகாயம்
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த அனல் மின் நிலைய கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள், நிலக்கரி சேமிக்கும் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் நேற்று வழக்கம்போல் ஈடுபட்டிருந்தனர். சுமார் 100 அடி உயரத்தில் 15க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். உரிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் பணியாற்றிய நிலையில், திடீரென சாரம் அனைத்தும் சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்ததும் செங்குன்றம் காவல் துணை ஆணையர் பாலாஜி தலைமையில் உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பொன்னேரி சப் கலெக்டர் ரவிக்குமார், தாசில்தார் சோமசுந்தரம் மற்றும் வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். ஸ்டான்லி மருத்துவமனையில் இறந்தவர்களின் அடையாளங்களையும், சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் விவரங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
* ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை: எண்ணூரில் பெல் நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.