Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

2026 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தபிறகும் 8வது சம்பள கமிஷன் ஆணையம் அமைக்காதது ஏன்..? திமுக எம்பி டிஆர் பாலு கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

புதுடெல்லி: அடுத்த ஆண்டு முதல் 8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்படும் என்று அறிவித்த பிறகும் இதுவரை ஆணையம் அமைக்காதது ஏன் என்பது குறித்து மக்களவையில் திமுக எம்பி டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு ஒன்றிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுவரை சம்பள கமிஷன் தொடர்பான ஆணையம் அமைக்கப்படவில்லை.

இது குறித்து நேற்று மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் சமாஜ்வாடி எம்பி ஆனந்த் படோரியா ஆகியோர் நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பினர்.

அதன் விவரம்:

  1. ஜனவரி 2025ல் அறிவிக்கப்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கான ஆணைய அறிவிப்பு வெளியிடப்பட்டதா?
  2. ஆம் எனில், அதன் விவரங்கள் வழங்கப்பட வேண்டும், இல்லையென்றால், 6 மாதங்கள் கடந்தும் ஆணையத்தை உருவாக்காததற்கான காரணங்களை வழங்க வேண்டும்.
  3. 8வது ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் ஆணையத்தின் குறிப்பு விதிமுறைகளுடன் முடிவடையும் காலக்கெடுவை வழங்க வேண்டும்.
  4. ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதங்கள் செயல்படுத்தப்படும் காலக்கெடுவை வழங்க வேண்டும். இவ்வாறு கேள்வி எழுப்பினர்.

இந்த கேள்விக்கு ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி அளித்த பதில் வருமாறு: 8வது சம்பள கமிஷன் அமைப்பது குறித்து பாதுகாப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் ஒவ்வொரு மாநிலங்களிலும் முக்கிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. 8வது ஊதியக் குழு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், 8வது ஊதியக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள். அந்த குழுவினர் பரிந்துரை அளித்ததும், அதை அரசு ஏற்றுக்கொண்டதும் உடனடியாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு உயரும்?

8வது ஊதிய குழு அறிக்கையை அமல்படுத்துவதன் மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ1.80 லட்சம் கோடி கூடுதல் செலவு ஏற்படும் என அம்பிட் கேப்பிடல் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. 8வது ஊதியக்குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 இருந்து ரூ. 32,940 முதல் ரூ. 44,280 வரை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

2026 ஜனவரியில் அமல்படுத்தப்படுமா?

6வது மற்றும் 7வது சம்பளக் குழுக்கள் அமைக்கப்பட்டபோது, அவை தங்கள் அறிக்கையைச் சமர்ப்பிக்க சுமார் 18 முதல் 24 மாதங்கள் ஆனது. அதன் பிறகு, அரசாங்கத்தின் ஒப்புதலும் அறிக்கையை செயல்படுத்துவதும் நேரம் எடுத்தது. இதைப்பார்க்கும் போது 8வது சம்பளக் குழு 2025 ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் உருவாக்கப்பட்டாலும், அதன் அறிக்கை 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யக்கூடும் என்றும், அதை ஒன்றிய அரசு அமல்படுத்துவது மேலும் தாமதமாகலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

  • அரசு ஊழியர்களின் ஊதியத்தை திருத்தியமைக்க ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒன்றிய அரசால் ஊதியக் குழு அமைக்கப்படுகிறது.
  •  7வது சம்பளக் குழு 2014 பிப்ரவரியில் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016 ஜனவரி 1 முதல் செயல்படுத்தப்பட்டன.
  •  8வது சம்பளக் குழு 2026 ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.