ரூ.66 கோடி மதிப்பில் 850 டீசல் பேருந்துகள் சிஎன்ஜியாக மாற்றம்: தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
சென்னை: தமிழகத்தில் 850 டீசல் பேருந்துகள் ரூ.66 கோடி மதிப்பில் சி.என்.ஜி பேருந்துகளாக மாற்றப்படுகிறது. இதற்கான ஒப்பந்த ஆணையை தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கி உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் டீசல் செலவை குறைக்கும் வகையில், டீசலுக்கு மாற்றாக, சி.என்.ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாயிலாக பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை தரப்பில் திட்டமிடப்பட்டன. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் 3 பேருந்துகள் மட்டும் சோதனை ஓட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டு சி.என்.ஜி பொருத்தப்பட்டு இயக்கப்பட்டன. இதனால், போக்குவரத்து கழகங்களின் செலவுகள் சற்று குறைந்தன.
இதையடுத்து, இந்த வகையான பேருந்துகளை அதிகரிக்க அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக 850 டீசல் பேருந்துகளை சி.என்.ஜி ஆக மாற்ற இகோ பியூல் சிஸ்டம் இந்தியா லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்த ஆணையை வழங்கி உள்ளது. அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த திட்டமானது 850 பேருந்துகளில் முழுமையாக நிறைவு பெற்றுவிடும். குறிப்பாக, இதன் மூலம் மாநிலத்தின் பசுமை போக்குவரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, கார்பன் உமிழ்வை குறைக்க உதவும்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,‘அரசு போக்குவரத்து கழகங்களை பொறுத்தவரை சிஎன்ஜி, மின்சார பேருந்துகள் போன்ற பல்வேறு முன்னெடுப்புகளை பயணிகளின் நலன் கருதி எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பேருந்துகளில் சிஎன்ஜி பொருத்தும் முடிவு எடுக்கப்பட்டு தற்போது 50க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுவிட்டன. இதனால், கிலோ மீட்டருக்கு ரூ.3.94 சேமிக்கப்பட்டுகின்றன. இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தற்போது ரூ.66 கோடி மதிப்பீட்டில் இகோ பியூல் சிஸ்டம் இந்தியா லிமிடேட் நிறுவனத்துடன் 850 டீசல் பேருந்துகளை சி.என்.ஜி ஆக மாற்றுவதற்கான ஒப்பந்தத்தை அளித்துள்ளோம். இதனால் அடுத்த சில ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் சி.என்.ஜிக்களாக மாற வாய்ப்புகள் உள்ளன,’ என்றார்.