Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரும்பாக்கம் மருந்து குடோனில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால், பவுடர் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

சென்னை: அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மருந்து குடோனில் வணிக ரீதியாகவும் சட்டவிரோதமாகவும் விற்பனை செய்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால் மற்றும் தாய்பால் பவுடரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை அரும்பாக்கம் பகுதியில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சதாசிவம் மற்றும் ராமராஜ் மற்றும் ஜெபராஜ் தலைமையில் அதிகாரிகள் நேற்று மதியம் அரும்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பார்மஸி குடோனில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சட்ட விரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: சட்ட விரோதமாக சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 800 பாட்டில் தாய்ப்பால் பவுடர் மற்றும் தாய்ப்பால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், தாய்ப்பால் பவுடர் வடிவிலும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர வைத்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. பவுடர் வடிவில் தாய்ப்பால் தமிழகத்தில் கைப்பற்றப்படுவது இதுவே முதல்முறை. ஒரு வருடம் இந்த தாய்ப்பால் பயன்படுத்தலாம் என்பது போன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஊட்டசத்து போன்ற இணைப்பொருட்கள் இணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், உணவு பாதுகாப்பு துறை சார்பில் எந்த ஒரு சான்றிதழ்களும் பெறாமலே இந்த தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது என விசாரணையில் தெரிய வந்தது.

தாய்ப்பால் ரூ.1,239 ஒரு பாட்டிலும், ரூ.900 ஒரு பாட்டிலும் என இரண்டு விதங்களில் விற்பனை நடந்து வந்துள்ளது. தாய்ப்பால் மாதிரிகளை சேகரித்து இதனை சென்னை கிண்டியில் உள்ள ஆய்வாளர்களுக்கு அனுப்பி அந்த ஆய்வின் முடிவில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் தாய்ப்பாலை சட்டவிரோதமாக விற்பனை செய்த நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தாய்ப்பால் அனைத்தும் கர்நாடகாவில் இருக்கக்கூடிய பெரு நிறுவனத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு இங்கு அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் விநியோகஸ்தராக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக இந்நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து பல மருத்துவமனைகளுக்கு தாய்ப்பால் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது. அதன் அடிப்படையில் மருத்துவமனைகளிலும் ஆய்வு மேற்கொள்ள உள்ளோம். மருத்துவமனைகளிலும் வணிகரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டால் அங்கும் நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடக பெரு நிறுவனத்தின் மீது இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். அதேபோல் இந்த மருந்தகத்தின் மீதும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் மற்றும் பவுடர்கள் கைப்பற்றப்பட்டு பதப்படுத்த பயன்படுத்திய குளிர்சாதனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. அவரது விளக்கம் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்படும். சென்னையில் வணிக ரீதியில் தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது குற்றம். அப்படி செயல்பட்டால் நூறு சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.