நீடாமங்கலம் : நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ரிஷியூர் கிராமம் தெற்கு தெருவில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக இருப்பதால் ஆடு ,மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்து அதன் மூலம் நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் ரிஷியூர் தெற்கு தெருவை சேர்ந்த விவசாயி பாலதண்டாயுதம் மீனாட்சி தம்பதியர் வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்தனர்.
வீட்டின் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியதில் 8 ஆடுகள் உயிரிழந்தன. இந்த பகுதியில் அவ்வபோது ஒன்றிரண்டு ஆடு மற்றும் கோழிகளை நாய்கள் கடித்து உயிரிழந்த நிலையில் கடந்த ஒரு மாதத்தில் இவ்வாறு சுமார் 26 ஆடுகளும் 20கும் மேற்பட்ட கோழிகளும் வெறி நாய் கடித்து உயிர் இழந்து உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். ஒரே இரவில் 8 ஆடுகள் நாய்கள் கடித்து உயிரிழந்துள்ளது.
இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்களையும் நாய்கள் துரத்துவதால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். அரசு அதிகாரிகள் ரிசியூர் கிராமத்தில் பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தும் நாய்களை பிடித்து செல்லவும் கருத்தடை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.