சென்னை: காலை 8-10 மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டாய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பிரபல ரயில்களில் இருக்கைகளுக்கான அதிக தேவை உள்ள காலை 8 மணி முதல் 10 மணி வரையிலான இரு மணி நேரத்தில் ஆதார் அங்கீகாரம் இன்றி டிக்கெட் புக் செய்ய முடியாது. இது பல கணக்குகள் அல்லது ஆட்டோமேட்டட் மென்பொருள் மூலம் நடக்கும் மோசடிகளைத் தடுத்து, உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆதார் இணைக்கப்படாத பயணிகள் இந்த 8-10 மணி நேரத்திற்கு பின்னர் டிக்கெட்டுகளை புக் செய்யலாம். அக்டோபர் 28ம் தேதி அன்று தொடங்கிய இந்த விதி,ஐஆர்சிடிசி யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி அமலிற்கு வந்துள்ளது.
முன்பு, ஐஆர்சிடிசி கணக்கை உருவாக்க மற்றும் டிக்கெட் பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமில்லை. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை மட்டும் கொண்டு கணக்கு உருவாக்க முடிந்தது. இதனால் ஒரே நபர் பல ஐஆர்சிடிசி கணக்குகளை உருவாக்கி மொத்தமாக டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வாய்ப்பு இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் தொடக்க நாள் டிக்கெட்டுகளை எளிதாக பதிவு செய்ய முடிந்ததால் மொத்த முன்பதிவுகள் அதிகரித்தன.
இதனால் உண்மையான பயணிகள் பாதிக்கப்பட்டு, டிக்கெட் கருப்பு சந்தை வணிகம் செழித்தோங்கியது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கான கட்டுப்பாடுகளின் தொடர்ச்சியாகும். ஜூலை 1ம் தேதி முதல், ஆன்லைன் தத்கால் டிக்கெட்டுகளுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டது. பின்னர், ஜூலை 15ம் தேதி முதல், ஆன்லைனில், டிக்கெட் புக் செய்யும்போது ஒடிபி அடிப்படையிலான ஆதார் அங்கீகார அடுக்கு சேர்க்கப்பட்டது. இது டிக்கெட் தவறான பயன்பாட்டை முழுமையாக ஒழிக்கும் நோக்கத்துடன் அமைந்துள்ளது.
இந்த புதிய விதி ஆன்லைன் முன்பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும். கவுன்டர்களில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு எந்த மாற்றமும் இல்லை. இந்த விதி அமலானதால், காலை டிக்கெட் முன்பதிவுக்கு ஐஆர்சிடிசியை சார்ந்திருக்கும் பயணிகள் ஆதார் அங்கீகாரத்தை முடித்துக் கொள்ளாவிட்டால் பரிவர்த்தனைகள் தோல்வியடையலாம். இந்த முயற்சி, மோசடிகளைக் குறைத்து, உண்மையான பயணிகளுக்கு வெளிப்படைத்தன்மையான டிக்கெட்டிங் அனுபவத்தை வழங்கும். இதன் மூலம், நியாய விலையில் டிக்கெட் பெறுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

