இலங்கை: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் ஒரு இந்தியர் உட்பட புத்த துறவிகள் 7 பேர் உயிரிழந்தனர். 7 பேரில் ஒரு இந்தியர், ஒரு ரஷ்யர், ஒரு ருமேனிய நாட்டவர் கேபிள் காரில் பயணித்ததாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ள நிகவெரட்டி புத்த மடாலயத்தில் கேபிள் கார் விபத்துகுள்ளானது.இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .
இலங்கையில் நிக்கவேரட்டியா அருகே நா உயன ஆரண்ய சேனாசனய என்ற ஒரு மடம் அமைந்துள்ளது. இது கொழும்புவில் இருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் தியானம் செய்ய வருகை தருவார்கள்.
இங்கு தரைப் பகுதியில் இருந்து கேபிள் கார் மூலம் துறவிகள் மலையில் இருக்கும் தியான மண்டபங்களுக்கு அழைத்து செல்லப்படுவது வழக்கம். இந்த நிலையில், ஒரு சிறிய கேபிள் கார் பெட்டியில் துறவிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென கேபிள் கார் பெட்டியின் கேபிள் அறுந்து விட்டது. இதனால், கார் வேகமாக கீழே இறங்கி வந்து ஒரு மரத்தில் பலமாக மோதியது.
இந்த காரில் 13 துறவிகள் பயணம் செய்தனர். இதில், இந்தியா வை சேர்ந்தவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு பேர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். 4 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இறந்தவர்களில் இந்தியா, ரஷ்யா, ரோமானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு துறவிகளும் அடங்குவர். காயம் அடைந்த ஆறு பேரில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து நடந்த போது, அதிகமான பொதுமக்கள் அந்த சிறிய காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து கேபிள் அறுந்ததற்கான காரணம் என்ன. காரில் அதிக நபர்கள் இருந்தார்களா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்த கொடூர விபத்து, மடத்துக்கு தியானத்துக்காக வந்திருந்த மற்ற துறவிகள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியான துறவிகளின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.