புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் பாதுகாப்புப் படையினரின் விழிப்புணர்வைச் சோதிக்க வைக்கப்பட்ட போலி வெடிகுண்டைக் கண்டுபிடிக்கத் தவறிய 7 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையின் வடக்கு நுழைவு வாயிலில், கடந்த வாரம் வழக்கமான பாதுகாப்பு ஒத்திகை ஒன்று நடத்தப்பட்டது. அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களின் விழிப்புணர்வு மற்றும் தயார்நிலையைச் சோதிப்பதற்காக அவர்களுக்கு தெரியாமல் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக, ஒரு சிறப்புக் குழுவிடம் போலி வெடிகுண்டு சாதனம் ஒன்று கொடுக்கப்பட்டு, அதனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கொண்டு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது.
அந்தக் குழுவும், செங்கோட்டையின் பிரதான நுழைவு வாயிலில் இருந்த பாதுகாப்புச் சோதனைகளை எளிதில் கடந்து, போலி வெடிகுண்டை யாருடைய கவனத்திற்கும் வராமல் உள்ளே வெற்றிகரமாகக் கொண்டு சென்றுள்ளது. இந்தச் சோதனையின்போது பணியில் இருந்த காவலர்களால் போலி வெடிகுண்டைக் கண்டுபிடிக்க முடியாதது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கடுமையான கவலைகளை எழுப்பியது. இதனையடுத்து, பாதுகாப்புப் பணியில் மெத்தனமாக இருந்த 7 போலீசார் தற்காலிகமாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாகத் துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.