Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு; சென்னை முழுவதும் 9,100 போலீசார் பாதுகாப்பு: முதல்வர் கொடி ஏற்றும் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் 9,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆகஸ்ட் 15ம் தேதி நாட்டின் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி சென்னை முழுவதும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர தினவிழா பேருரையாற்றுகிறார். அதன்பேரில், சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், கார்த்திகேயன், பிரவேஷ் குமார் ஆகியோர் மேற்பார்வையில், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து, மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய பிரமுகர்கள் செல்லும் இடங்களில் கூடுதலாக காவல் குழுவினர் நியமிக்கப்பட்டு, தீவிர சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களின் நடமாட்டம், கேட்பாரற்ற வாகனங்கள் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை முழுவதும் அந்தந்த காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நான்கு சக்கர மற்றும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் மூலம் தீவிர வாகனத் தணிக்கைகள், முக்கிய இடங்களில் காவல் துறையினர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டும், பாதுகாப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.