Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

7972 பேர் பட்டம் பெற்றனர் திறந்த நிலை பல்கலை பட்டமளிப்பு விழா

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். விழாவில் குஜராத் டாக்டர் அம்பேத்கர் திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆமி உபாத்யாய் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆறுமுகம் வரவேற்றார். மொத்தம் 7972 மாணவ, மாணவியர் பட்டம் பெற்றனர். முனைவர் பட்டம் 15, முதுநிலை பட்டம் 3098, இளநிலை பட்டம் 3007, பட்டயப் படிப்பு 103, முதுநிலை பட்டப் படிப்பு 5, தொழில் கல்வி பட்டயப் படிப்பு 1744 பேர் பட்டம் பெற்றனர். இவர்களில் 304 மாணவர்கள் சான்றிதழ் படிப்பை நேரடியாகவும், 7668 பேர் சான்றிதழ் படிப்பை அஞ்சல் வழியிலும் பெற்றுள்ளனர்.

கனடாவின் வான்கூரில் அமைந்துள்ள காமன்வெல்த் கல்விக் கழகத்தின், ஆசியாவுக்கான காமனவெல்த் கல்வி ஊடக மையம், தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பப் பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியரில் ஒருவருக்கு ஆண்டுதோறும் வழங்கும் விருது, 2024ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்தில் முதுநிலை கணினி அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி எஸ்.திவ்யா என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது.

மேலும், கேபிஆர் அறக்கட்டளையின் விருதுகள் 9 பேருக்கு வழங்கப்பட்டது. அதில் முதுநிலை உளவியல், முதுநிலை சமூகவியல், முதுநிலை பொருளாதாரம், முதுநிலை சமூகப்பணி மற்றும் இளநிலை வேதியியல் பாடங்களில் முதன்மை பெற்றுள்ளவர்கள் விருதுகளை பெற்றனர்.

* உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பு

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்து நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்தது. ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டம் வழங்கவும், சிறப்பு விருந்தினராக குஜராத்தின் டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆமி.உ.உபாத்யாத் பங்கேற்பதாகவும், உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், உயர்கல்வித்துறை செயலர் சங்கர் ஆகியோர் பங்கேற்பதாகவும் பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. ஒன்றிய அரசின் போக்கை எதிர்த்தும், கலைஞர் பெயரால் தொடங்கப்பட உள்ள பல்கலைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அமைச்சர் விழாவை புறக்கணித்துவிட்டார் என்றும் பேசப்பட்டது. ஆனால், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் தலைமையில் நடந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்க சென்றதாக அந்த துறையின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.