*நாகை கலெக்டர் நேரில் ஆய்வு
கீழ்வேளூர் : நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலவாழக்கரை பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை நாகை கலெக்டர் ஆகாஷ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட 6ம் நாள் முகாம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் வடக்கு பொய்கை நல்லூர், தெற்கு பொய்கை நல்லூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு வடக்கு பொய்கை நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதே போல, கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மடப்புரம், மேலவாழக்கரை, மீனம்பநல்லூர், ஈசனூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு மேலவாழக்கரை சரஸ்வதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளியிலும் நடைபெற்றது. இந்த முகாம்களை கலெக்டர் ஆகாஷ் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த திட்ட முகாமில் சுமார் 780 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களின் உடனடி தீர்வாக மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்த ஆணை, வருமானச் சான்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை, பெயர் மாற்றம் பட்டா நகல் போன்றவைகளை பயனாளிகளுக்கு நாகை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமார், செபஸ்தியம்மாள், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், அரிகிருஷ்ணன், நாகப்பட்டினம் மற்றும் திருக்குவளை வட்டாட்சியர்கள் நீலாதாட்சி, கிரிஜாதேவி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.