Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

75 வயது சர்ச்சை

ஆர்எஸ்எஸ் என்னும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தில் இருந்து உருவான ஜன சங்கம் என்னும் அமைப்பு, பிறகு 1980ல் பாரதிய ஜனதா கட்சியாக உருபெற்றது. நாட்டை ஆளும் பாரதிய ஜனதா கட்சியில், இன்றைக்கு பெரும் தலைவராக, அனைத்தையும் இயக்கும் நபராக பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். ஆனால், பாஜவில் ஒரு எழுதப்படாத விதியாக 75 வயது பூர்த்தியானவர்கள், தாங்கள் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுபட வேண்டும் என்பது உள்ளது. இந்த விதியின் காரணமாகவே, நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தி பாஜவை ஆட்சி பீடத்திற்கு கொண்டு வந்து அமர்த்திய எல்.கே.அத்வானி, மூத்த தலைவர்களான முரளிமனோகர் ஜோஷி, குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் படேல், நஜ்மல்ஹெப்துல்லா, சுமித்ரா மகாஜன், எடியூரப்பா ஆகியோர் தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலக நேரிட்டது.

தற்போது அப்படியொரு சூழல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வந்திருக்கிறது. வரும் செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் மோடிக்கு 75 வயதாகிறது. அவர், ஓய்வு பெற வேண்டும் என தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மறைமுகமாக கூறிவிட்டார். நாக்பூரில் கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன்பகவத், ``உங்களுக்கு 75 வயதாகிறது என்றால், நீங்கள் ஒதுங்கி கொண்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும்’’ எனக்கூறியிருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் இந்த கருத்து தற்போது பாஜவினரிடையே பெரும் புயலை கிளப்பியுள்ளது. மோடியால் தான், மூன்றாவது முறையாக ஆட்சி பீடத்தில் பாஜ அமர்ந்திருக்கிறது. அவருக்காக தான், மக்கள் வாக்களித்தார்கள், அதனால் அவரை ஓய்வு பெற சொல்லக்கூடாது என அனைத்து மட்டத்தில் இருந்தும் எதிர் பேச்சுகள் வந்துள்ளன.

உள்துறை அமைச்சரான அமித்ஷாவும், பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங்கும் பிரதமர் மோடி பதவி விலக தேவையில்லை, பாஜவில் 75 வயது ஓய்வு என்று எதுவும் இல்லை, எனக்கூறியிருக்கின்றனர். இருந்தாலும், ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்து மோடி ஓய்வு பெற நெருக்கடிகள் வருவதாக கூறப்படுவதால், அவருக்கு மிகவும் நெருக்கமான எம்பிக்களில் ஒருவரான நிஷிகாந்த் துபே, அதிரடியான ஒரு கருத்தை தெரிவித்து, 75 வயது சர்ச்சையை பெரிதாக்கியுள்ளார். 75 வயதாகிவிட்டது என்று கூறி பிரதமர் மோடியை ஓய்வு பெற சொல்லிவிட்டால், பாஜ 150 இடங்களில் கூட வெற்றி பெறாது. மோடியால் தான், பாஜ இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறது. அடுத்த 2029 நாடாளுமன்ற தேர்தலையும் மோடி தலைமையிலேயே சந்திக்க வேண்டும். இல்லையென்றால் 150 இடம் கூட வெல்ல முடியாது எனக்கூறி ஆர்எஸ்எஸ் தலைவருக்கு பதில் கொடுத்திருக்கிறார்.

எம்பி நிஷிகாந்த் துபே இக்கருத்தை கூறியிருந்தாலும், இது மோடியின் வார்த்தை, வேறு யாரும் இப்படி பேசியிருக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். 75 வயது கடந்தபிறகும் பதவியில் தொடர வேண்டுமென்பதே மோடியின் விருப்பம், அதனை தற்போது வெளிப்படுத்தியிருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்களும் கூறியிருக்கின்றனர். மோடிக்கு 75 வயதாகும் அதே செப்டம்பரில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கும் 75 வயதாகவுள்ளதாகவும், அவரும் தன் பொறுப்பை விட்டு விலகி செல்வாரா எனவும் மோடியின் ஆதரவாளர்கள் எதிர்கேள்வி எழுப்பியுள்ளனர். ஆர்எஸ்எஸ் கொள்கை, சித்தாந்தம் படியே பாஜ ஆட்சியை நடத்துகிறது என்பதால், இந்த 75 வயது சர்ச்சை இப்போதைக்கு ஓயப்போவதில்லை என்பதே நிஜம்.