Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டி: 104 சதவீதம் அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு மக்களவை தேர்தலில் 751 கட்சிகள் போட்டியிட்டுள்ளன. கடந்த 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 104 சதவீதம் அதிகம். 2024 மக்களவை தேர்தல் தொடர்பான சில புள்ளிவிவரங்களை ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான தன்னார்வ அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது நடந்து வரும் மக்களவை தேர்தலில் மொத்தம் 751 அரசியல் கட்சிகள் போட்டியிட்டுள்ளன. கடந்த 2019ல் 677 கட்சிகளும், 2014ல் 464 கட்சிகளும், 2009ல் 368 கட்சிகளும் போட்டியிட்டுள்ளன. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது 104 சதவீதம் அதிகரித்துள்ளது.

இம்முறை மொத்தம் 8,337 வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்கி உள்ளனர். இவர்களில் தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் 1,333 பேர். மாநில கட்சியை சேர்ந்தவர்கள் 532, பதிவு செய்த அங்கீகரிக்கப்படாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 2,850 பேர், சுயேச்சை வேட்பாளர்கள் 3,915 பேர் ஆவர். தேசிய கட்சிகளின் 1,333 வேட்பாளர்களில் 443 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 295 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. மாநில கட்சி வேட்பாளர்களில் 249 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 169 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகள் உள்ளன.

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் 401 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 316 பேர் மீது தீவிர கிரிமினல் வழக்குகளும், சுயேச்சைகளில் 550 பேர் மீது கிரிமினல் வழக்குகளும், 411 மீது தீவிர கிரிமினல் வழக்குகளும் உள்ளன. 8,337 வேட்பாளர்களில் 2,572 பேர் கோடீஸ்வரர்கள். தேசிய கட்சிகளில் 906 பேரும், மாநில கட்சிகளில் 421 பேரும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் 572 பேரும், சுயேச்சைகளில் 673 பேரும் கோடீஸ்வரர்கள் ஆவர்.