Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

16 கடைகளுக்கு நோட்டீஸ்: ரூ.12 ஆயிரம் அபராதம் 73 பானிபூரி கடைகளில் ரெய்டு-அதிக கலர் நிறமி சேர்த்த 65 லிட்டர் மசாலா பறிமுதல்

கோவை : கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள 73 பானிபூரி கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் உத்தரவின் பேரில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 10 குழுக்களாக பிரிந்து பானிபூரி கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அதன்படி, அதிகாரிகள் குழுவினர் காந்திபுரம், வஉசி பூங்கா, காந்திபார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு மற்றும் சித்ரா, சிங்காநல்லூர், கணபதி சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி, டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம், சுந்தராபுரம், குனியமுத்தூர் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், துரித உணவு விற்பனை செய்யும் ஷாப்கள், தள்ளுவண்டி கடைகளில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின் போது கண்டறிந்த குறைகளை சரிசெய்யும் பொருட்டு நோட்டீஸ் கொடுத்தல் மற்றும் கள ஆய்வு அபராதம், உணவு மாதிரிகள் எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டத்தில் இதுவரை 73 கடைகளை ஆய்வு செய்தனர். இதில், 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டும், 4 உணவு மாதிரிகளும், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்திற்காக 6 கடைகளுக்கு அபராதமாக ரூ.12 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 73 சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் 4 தயாரிப்பு இடங்களில் அதிக கலர் நிறமி சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பானிபூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, காளான் 5 கிலோ மற்றும் 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா, செய்திதாள்களை பயன்படுத்தி பறிமாறப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவு பொருட்கள் மற்றும் அதிக நிறமி சேர்க்கப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

இதன் மதிப்பு சுமார் ரூ.28 ஆயிரத்து 200 ஆகும். இதில், நான்கு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது பகுப்பாய்வு அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இது போன்ற ஆய்வு தொடர் நடவடிக்கையாக மேற்கொள்ளப்படும் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொதுமக்கள் மிகுந்த கலர் நிறமி சேர்க்கப்பட்ட மற்றும் சரியான முறையில் பராமரிக்கப்படாத சுகாதாரமான மற்றும் தரமான முறையில் தயாரிக்கப்படாத பானிபூரி விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பானிபூரி தயாரிக்கப்படும் இடங்கள், சில்லி சிக்கன் கடைகள், துரித உணவு கடைகள், சாட் பொருட்கள் விற்பனை செய்யும் தள்ளுவண்டி கடைகள் கண்டறியப்பட்டால் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். மேலும், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து உணவு பாதுகாப்பு துறையின் tnfoodsafetyconsumer என்ற செயலினை பதிவிறக்கம் செய்து புகார் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.