சதுர்த்தி விழா கோலாகலம்; கோவையில் 712 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை: புலியகுளம் விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம்
கோவை: சதுர்த்தி விழாவையொட்டி கோவையில் 712 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. புலியகுளம் விநாயகருக்கு 4 டன் மலர்களால் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் கோயில்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கோவை மாநகரில் இந்து முன்னணி சார்பில் 501 சிலைகள் உட்பட 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் நகரில் பல இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் இந்து அமைப்புகள் சார்பில் 1,600 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 2,300 சிலை வைக்கப்பட்டுள்ளன.
கோவை புலியகுளம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில் ஆசியாவிலேயே உயரமான ஒரே கல்லால் ஆன விநாயகர் சிலை உள்ள கோயிலாகும். இங்குள்ள விநாயகர் சிலையின் உயரம் 19 அடி 10 அங்குலம், 190 டன் எடை கொண்டது குறிப்பிடத்தக்கது. விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு 4 டன் மலர் மாலைகளால் சந்தன காப்புடன் ராஜ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் சதுர்த்திக்கு முக்கிய மலர்களான செவ்வந்தி, ரோஜா, அருகம்புல் ஆகிய பூ மாலைகளை விநாயகருக்கு அலங்காரமாக அணிவிக்கப்பட்டது. முன்னதாக, அதிகாலை 4.30 மணி முதல் தேன், பால், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீருடன் 16 வகை வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் தரப்பில் பக்தர்கள் வரிசையாக நின்று வழிபாடு செய்யும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்து முன்னணி சார்பில் கோவை ரத்தினபுரி சாஸ்திரி சாலையில் 33வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. செல்வ கணபதி சிலைக்கு பத்து லட்சம் ரூபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் 10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய், 200 ரூபாய் 500 ரூபாய் வரை செல்வ கணபதியை சுற்றி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முண்ணனி மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், பாஜ ஓபிசி அணி மாவட்ட தலைவர் சுதாகர், இந்து முன்னணி நகர பொது செயலாளர் சங்கர், நகர பொருளாளர்கள் கிஷோர் குமார், மனோஜ் குமார், பல்சர் ராஜன் மணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில், அரசமரத்து விநாயகர் கோயிலில் சந்தன காப்பு அலங்கார சிறப்பு பூஜை இன்று நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர் பல வருடங்களாக விநாயகர் சிறப்பு பூஜை செய்து வருகிறார். அதன்படி இந்த வருடமும் அதிகாலை 2 மணிக்கு விநாயகருக்கு சந்தன அலங்காரம் சிறப்பு பூஜை செய்தார். இது குறித்து அவர் கூறுகையில் ‘பிரசித்தி பெற்ற சக்தி வாய்ந்த அரசமரத்து விநாயகர் கோயிலில் வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்து வருகிறோம். கடந்த 24 வருடங்களாக விநாயகர் சதுர்த்தி நாளன்று அதிகாலை சந்தன காப்பு அலங்கார சிறப்பு பூஜை செய்து வருகிறோம். விநாயகருக்கு பக்தியுடன் அபிஷேகம் செய்து, சந்தன காப்பு வைத்தோம். பட்டு வஸ்திரம் சூட்டி, அருகம்புல் மாலை அணிவித்து பூஜை செய்தோம். நாட்டு மக்கள் நலன் வேண்டி சிறப்பு வழிபாடு செய்தோம்’’ என்றார்.
பொதுமக்களும் தங்களது வீடுகளில் சிறிய விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்தனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி புறநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 29ம் தேதி சிறுமுகை, அம்பராம்பாளையம், நொய்யல் ஆறு, சாடிவயல், வாளையாறு அணை, வால்பாறை நடுமலையாறு உள்ளிட்ட நீர் நிலைகளிலும், மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் வருகிற 31ம் தேதி சிங்காநல்லூர் குளம், முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்பட உள்ளது. அதற்காக நீர் நிலைகளில் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டம் முழுவதும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பதற்றம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சிலை கரைக்கும் வரை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.