Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

70வது தேசிய திரைப்பட அவார்டு திருச்சிற்றம்பலம், பொன்னியின் செல்வன் படத்துக்கு விருதுகள்: சிறந்த நடிகை நித்யா மேனன், சிறந்த நடிகர் ரிஷப் ஷெட்டி

புதுடெல்லி: 70வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் படங்கள் 6 விருதுகளை வென்றுள்ளது. 2022ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்குவதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா நடித்த ‘பொன்னியன் செல்வன்’ படங்கள் தமிழில் விருதுகள் பெற்றுள்ளன.

அந்த வகையில் சிறந்த நடிகைக்கான விருதை ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் சிறந்த நடன இயக்கத்துக்காக மாஸ்டர்கள் ஜானி, சதீஷ் ஆகியோருக்கு ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே’ பாடலுக்கு வழங்கப்படும். சிறந்த தமிழ்த் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன் 1’ தேர்வாகியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு - ரவிவர்மன், சிறந்த பின்னணி இசை - ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த ஒலிப்பதிவு - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி என ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படத்திற்கு மொத்தம் நான்கு விருதுகள் கிடைத்துள்ளன.

தேசிய அளவில் சிறந்த படமாக மலையாள படமான ‘ஆட்டம்’ தேர்வாகியுள்ளது. சிறந்த நடிகராக ரிஷப் ஷெட்டி (காந்தாரா), சிறந்த சண்டைப் பயிற்சிக்கான விருது அன்பறிவு (கே.ஜி.எஃப் -2) ஆகியோருக்குக் கிடைத்திருக்கிறது. சிறந்த இயக்குனராக ‘ஊன்ச்சாய்’ இந்தி படத்துக்காக இயக்குனர் சூரஜ் பர்ஜாத்யா தேர்வானார். சிறந்த துணை நடிகையாக நீனா குப்தா, சிறந்த துணை நடிகராக பவன் மல்ஹோத்ரா, பொழுதுபோக்கிற்கான சிறந்த திரைப்படமாக ‘காந்தாரா’வும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குல்மோகரில் நடித்த மனோஜ் பாஜ்பாய்க்கு சிறப்பு விருது வழங்கப்படும்.

பிற விருதுகள்: சிறந்த பொழுதுபோக்கு படம் - காந்தாரா. அதிரடி இயக்கம் - கேஜிஎப்: அத்தியாயம் 2. பாடல் வரிகள் - ஃபௌஜா (அரியானா மாநில மொழி படம்). இசையமைப்பாளர் - ப்ரீதம் (பாடல்கள்). ஒப்பனை - அபராஜிதோ (பெங்காலி). ஆடைகள் - கட்ச் எக்ஸ்பிரஸ். தயாரிப்பு வடிவமைப்பு - அபராஜிதோ. எடிட்டிங் - ஆட்டம். திரைக்கதை - ஆட்டம். வசனங்கள் - குல்மோகர். மற்ற மொழியில் சிறந்த படங்கள்: தெலுங்கு - கார்த்திகேயா 2. பஞ்சாபி - பாகி டி டீ. ஒடியா - தமன். மலையாளம் - சௌதி வெலக்கா. மராத்தி - வால்வி. கன்னடம் - கேஜிஎப்: அத்தியாயம் 2. இந்தி - குல்மோஹர். கொரோனா தொற்றுநோய் காரணமாக தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாக்கள் இரண்டு ஆண்டுகள் நடைபெறவில்லை. அதனாலேயே 2022 விருதுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

* ஆட்டம் என்ன கதை?

தேசிய அளவில் சிறந்த படமான தேர்வான ‘ஆட்டம்’ மலையாள படத்தை அறிமுக இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை: 12 ஆண்கள் சேர்ந்து நடத்தும் ஒரு நாடகக் குழுவில் ஒரே ஒரு பெண் இருக்கிறார். நாடகத்தை மட்டுமே நம்பி வாழ முடியாத சூழல். இதனால் தங்களுக்கு தெரிந்த வேறு வேலைகளையும் அவர்கள் பார்க்கிறார்கள். நாடகக் குழுவில் இருக்கும் அஞ்சலியும் (ஜரின் ஷிஹாப்) வினய்யும் (வினய் ஃபோர்ட்) காதலர்கள். இந்த குழுவின் நாடகத்தை பார்த்து ரசிக்கும் வெளிநாட்டவர்கள் குழுவுக்கு பார்ட்டி தருகிறார்கள். அன்றைய இரவு, அஞ்சலி, நாடக குழுவை சேர்ந்த ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறார். இந்த விவகாரம் நாடகக் குழு நீதிக்காக வரும்போது, 12 ஆண்கள் குழுவில் ஒரு பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததா என்பதை சமூகப் பார்வையுடன் சொல்லும் படம்தான் ‘ஆட்டம்’.

* ரஹ்மானுக்கு 7 வது முறை விருது

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான்தான் முன்னணியில் இருக்கிறார். இந்த முறை கிடைக்கப்போகும் விருதுடன் சேர்த்து அவர் 7 தடவை தேசிய விருது பெற்று சாதனை படைக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இளையராஜா இருக்கிறார். அவர் 5 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.