70 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி. விலையில் மது விற்க புதிய திட்டம்: விரைவில் சென்னையில் அறிமுகம்
சென்னை: சென்னையில் உள்ள சுமார் 70 டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எம்.ஆர்.பி விலை மது வாங்க டைனமிக் க்யூஆர் கோடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டாஸ்மாக்கில் விற்பனையாளர்கள் அதிக விலை வசூலிப்பதை ஒழிக்க ஸ்கேனர்களை பிஓஎஸ் இயந்திரங்களுடன் இணைக்கிறது. இதன்மூலம் டிஜிட்டல் பணம் செலுத்தும்போது அச்சிடப்பட்ட விலைக்கு மட்டுமே டைனமிக் க்யூஆர் கோடு உருவாக்கப்படும். இதனால் கைமாற்று உள்ளீடு அல்லது கூடுதல் ‘சேவை’ வசூல் செய்ய வாய்ப்பே இல்லை.
அனைத்து கடைகளுக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எம்.ஆர்.பி. மட்டுமே வசூலிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த புதிய நடவடிக்கை சமரசமின்றி இதை அமல்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. எழும்பூரில் உள்ள இரண்டு கடைகள் உள்பட மாநிலத்தின் ஐந்து பிராந்தியங்களிலும் உள்ள இரண்டு கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களுடன் ஸ்கேனர்களை இணைக்கும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 70 நிலையங்களில் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
அடுத்தகட்டமாக, ஒரு வாரத்தில் சென்னை மத்திய மாவட்டத்தில் உள்ள அனைத்து 90 கடைகளுக்கும் இந்த இணைப்பு விரிவுபடுத்தப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுதொடர்பாக டாஸ்மாக் ஊழியர்கள் சங்கப் பொதுச்செயலாளர் கூறுகையில், ‘‘சோதனை நடக்கும் கடைகளில் பிஓஎஸ் இயந்திரங்களும் கை சாதனங்களும் வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துவதால் இணைப்புச் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிங்க் செய்த பிறகு, அனைத்து மது விற்பனை கடைகளிலும் இந்த அமைப்பை எளிதாக செயல்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

