Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

70 பேரவை தொகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்தது டெல்லியில் 58 சதவீத வாக்குப்பதிவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

புதுடெல்லி: டெல்லியில் சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடந்தது. இதில், 58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வருகிற 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வருகிற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கடந்த மாதம் 7ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அங்கு ஆளும் ஆம்ஆத்மி கட்சி, பாஜ, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்து மூன்றாம் முறையாக ஆட்சியமைக்க வேண்டும் என்று முனைப்புடன் பிரசாரம் செய்து வந்தது.

அதே நேரத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜ, காங்கிரஸ் தீவிரமாக வாக்கு சேகரித்தன. இந்த தேர்தலில் 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், முதல்வர் அடிசி, உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி மற்றும் உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பாஜவுக்காக வாக்கு சேகரித்தனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி ஆகியோர். காங்கிரசுக்கு ஆதரவு திரட்டினர்.

கடந்த 3ம் தேதி பிரசாரம் நிறைவடைந்தது. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு 13,766 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை நேரத்தில் மக்கள் குறைந்த அளவிலே வாக்களித்து வந்தனர். மாறாக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விஐபிக்கள் வாக்குப்பதிவு தொடங்கிய உடனே தங்களது ஜனநாயக கடமையாற்றினர். அதன்படி, ஜனாதிபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய் சங்கர், எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, டெல்லி முதல்வர் அடிசி, கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.

அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. ஆனால், அப்போது வரிசையில் நின்றிருந்த வாக்களர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன. அதன்படி, அவர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மாலை 6 மணி வரை மொத்தம் 58 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வரிசையில் நிற்பவர்கள் வாக்களிக்கப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

70 தொகுதிகளில் பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. பதிவான வாக்குகள் வருகிற 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றைய தினம் டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.

* டெல்லியில் பாஜ ஆட்சியை பிடிக்கும்: கருத்து கணிப்பில் தகவல்

நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜ ஆட்சி அமையும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தகவல் வெளியாகி உள்ளன. தலைநகர் டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு எந்த வித அசம்பாவிதங்கள் இல்லாமல் அமைதியாக நடைபெற்று முடிந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பின்னர் தேர்தலுக்கு பிந்தையை கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

அதில், டெல்லியில் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி இந்த தேர்தலில் ஆட்சியை இழக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனால், கடுமையான போட்டி இருக்கும் என்றும் அந்த முடிவுகள் காட்டுகின்றன. குறைந்தது 4 கருத்து கணிப்புகள் பாஜவுக்கு 42 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்துள்ளன. அரியானா,மகாராஷ்டிரா பேரவை தேர்தல்களில் அமோக வெற்றி பெற்ற பாஜவுக்கு இந்த தேர்தல் வெற்றி மிக பெரிய ஊக்கமாக இருக்கும் என கூறப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் ஆம் ஆத்மிக்கு 30 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது.

கடந்த 2 தேர்தல்களிலும் ஒரு சீட்டை கூட பெறாத காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று முதல் 3 இடங்கள் வரை கிடைக்கும் என்று சாணக்கியா, மேட்ரிஸ், ஜேவிசி, போல் டைரி ஆகிய நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. கடந்த 2015, 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முறையே 68, 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை அந்த கட்சியோ, பாஜவோ அவ்வளவு இடங்களை பெறாது என்று தெரிகிறது. ஆம் ஆத்மியைவிட 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே பாஜ வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998ம் ஆண்டு பாஜ மூத்த தலைவராக இருந்த சுஷ்மா சுவராஜ் டெல்லியில் முதல்வராக இருந்தார்.

அதன் பிறகு அங்கு பாஜவால் ஆட்சி அமைக்க முடியவில்லை.27 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கட்சி டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. மேட்ரிஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜவிற்கு 40 சீட்களும், ஆம் ஆத்மிக்கு 37 இடங்கள் வரை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேபோல் முன்னாள் ஆளும் கட்சியான காங்கிரஸ் 1 தொகுதியில் வெற்றிபெறும். மக்கள் பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில், பாஜ 51-60, ஆம் ஆத்மி 10-19, காங்கிரஸ்சுக்கு ஜீரோ தொகுதிகள் கிடைக்கும் என்கிறது. அதேபோல், பி- மார்க் நிறுவத்தின் முடிவுகளின்படி, பாஜ 39-49, ஆம் ஆத்மி 21-31, காங்கிரஸ் 1 என்று தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் பாஜ ஆம் ஆத்மி காங்.

மேட்ரிஸ் 35-40 32 - 37 0-1

மக்கள் பிளஸ் 51-60 10-19 0

மக்கள் இன்சைட் 40-44 25 -29 0-1

பி- மார்க் 39-49 21-31 0-1

ஜேவிசி 39-45 22-31 0-