Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்டாவில் சூறாவளி காற்றுடன் மழை தஞ்சை, திருவாரூரில் 7,000 ஏக்கர் நெற்பயிர் மழை நீரில் சாய்ந்தது

தஞ்சாவூர் : டெல்டாவில் சூறாவளி காற்றுடன் கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 7,000 ஏக்கர் கோடை நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் நேற்றுமுன்தினம் இரவு 3வது நாளாக மழை பெய்தது. நாகையில், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பலத்த காற்றுடன் அரை மணி நேரம் மழை பொழிந்தது. தஞ்சை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் இடி, மின்னல், காற்றுடன் 1 மணி நேரம் மழை கொட்டியது.

சூறவாளி காற்று வீசியதில் தஞ்சை ரயில் நிலையத்தில் உள்ள மூன்று மற்றும் நான்காவது நடைமேடையில் இருந்த மேற்கூரை விழுந்து மின் கம்பியில் சிக்கியது. அப்போது நடைமேடையில் பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் நிகழவில்லை. இதனால் மூன்றாவது நடைபாதையில் செல்ல இருந்த அனைத்து ரயில்களும் ஐந்து மற்றும் 6வது நடைமேடை வழியாக திருப்பி விடப்பட்டது. நடைமேடையில் விழுந்த செட் நேற்று காலை அப்புறப்படுத்திவிட்டு மின் கம்பிகள் சரி செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சித்தமல்லி, பரப்பனாமேடு, கோவில்வெண்ணி, ஆதனூர், ரிஷியூர், ராயபுரம், அனுமந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பம்புசெட் பாசனம் மூலம் 16,500 ஏக்கரில் கோடை சாகுபடி செய்துள்ளனர். முன்பட்டத்தில் சாகுபடி செய்தவர்கள் இயந்திரம் மூலம் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் இந்த கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நனைந்து சாய்ந்தது.

இதனால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் தஞ்சையில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவடை செய்யும் நேரத்தில் மழை பெய்ததால் நெல்லை அறுவடை செய்ய முடியாமலும், தண்ணீரை வடிய வைக்க முடியாமலும் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ரெட்டிக்குடிக்காடு அடுத்த அகரம்சீகூரில் கடந்த இரண்டு தினங்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை அகரம்சீகூர்-செந்துறை சாலையில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது. அதிகாலை நேரத்தில் மரம் சாய்ந்ததால் எந்தவித பாதிப்பும் இல்லை. விஏஒ மனோகரன் மேற்பார்வையில் கிராம மக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரக்கிளைகளை உடனடியாக வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.