*பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
கூடலூர் : கூடலூரில் உள்ள 70 ஆண்டுகளை கடந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஏற்கனவே உள்ள மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதோடு, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையம் 1955ம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. 70 ஆண்டுகள் கடந்த நிலையில் கூடலூர், லோயர்கேம்ப், பளியங்குடி கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி மற்றும் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் மருத்துவ பயன் அடைந்து வருகின்றனர்.
தற்போது 5 மருத்துவர்கள், 4 நர்ஸ்கள்,உதவியாளர்கள் 4 பேர் பணியாற்றி வரும் இந்த மருத்துவமனையில் அடிப்படையான மருத்துவ வசதிகளோடு, சித்த மருத்துவம், காசநோய் பிரிவுகளும், நுண்கதிர், மகப்பேறு, பல் மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ வசதிகளும், குறிப்பாக குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை இங்கு அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
புற மருத்துவ பயனாளர்கள் காத்திருப்பு அறை, உள் மருத்துவ பயனாளர்கள் பயன்பாட்டிற்காக 30 படுக்கைகள், தேவையான ஆண் / பெண் சுகாதார வசதிகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனி வசதிகள் செய்யப்பட்டுள்ள இந்த மருத்துவமனை மூலம் அடுத்துள்ள கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் இருந்தும், தோட்ட தொழிலாளர்கள் என 300 இருந்து 500 பேர் வரை மருத்துவ பயனாளிகள் வருகைதருகின்றனர். அது மட்டுமன்றி தடுப்பூசி, மக்கள் தேடி மருத்துவம், சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட அரசு சேவைகளும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் அப்பகுதி மக்களுக்கு கிடைக்கின்றன.
தரம் உயர்த்த வேண்டும்
கூடலூர் மக்கள் மன்றத்தை சேர்ந்த புது ராஜா கூறுகையில், ‘‘நாய்க்கடி தடுப்பூசி, பாம்பு உள்ளிட்ட விஷச் ஜந்துக்கள் சிகிச்சைக்காக பெரும்பாலும் கம்பம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே போதிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தின் உள்ளே ஹச் டி மின்வயர்கள் மிகவும் தாழ்வாக உள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் கனரக வாகனங்கள் வரும்போது இதனால் சிக்கல் ஏற்படுகிறது. எனவே மின் வயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும்.
தற்போது நீரிழிவு நோய் அதிகரித்து வரும் நிலையில் டயாலிஸ்ட் செய்வதற்கான உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும். மேலும் பயன்பாட்டில் உள்ள பழைய எக்ஸ்ரே இயந்திரத்திற்கு பதில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தை கொண்டு வர வேண்டும்.
கம்பம் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ள நிலையில், கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்க்கு பயன்பாடு கருதி அரசு விதிமுறைகளிலிருந்து விலக்குபெற்று, கூடலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்’’என்றார்.
கூடலூரை சேர்ந்த குருதி கொடையாளர் சபீர்கான் கூறுகையில், ‘‘இந்த மருத்துவமனையில் 25 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த ஆம்புலன்ஸ் தற்போது காலாவதியாகிவிட்ட நிலையில் மருத்துவமனை வளாகத்திலேயே பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கூடலூர் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு விபத்து மற்றும் பிரசவ கால அவசர மருத்துவ தேவைகளுக்கும், தேனி மாவட்டத்தில் கேரளாவை இணைக்கும் முக்கிய வழிச்சாலையான குமுளி மலைப்பாதை இருப்பதால் பேரிடர் காலங்களிலும்,ஏற்படும் விபத்துகளின் போதும் ஆம்புலன்ஸ் தேவைஅவசியமுள்ளது.
எனவே தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ்க்கு பதிலாக நவீன புதிய ஆம்புலன்ஸ் வேண்டும். அதுபோல் விபத்து காலங்களில் முதலுதவி சிகிச்சை மட்டும் இங்கு அளிக்கப்பட்டு அவசர சிகிச்சைக்காக கம்பம் செல்ல வேண்டியுள்ள நிலையில், உயிர் இழப்புகளை தவிர்க்கும் விதமாக அவசர சிகிச்சை பிரிவில் உள்ள வசதிகளை மேம்படுத்தி இங்கேயே உரியசிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’என்றார்.
21வது வார்டு கவுன்சிலர் தினகரன் கூறுகையில், ‘‘இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனை வசதிகள் இல்லாததால் அகால மரணம் அடைந்தவர்களின் உடல்கள் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களுக்கும் நேரம் மற்றும் பொருளாதார வீண் விரையம் ஏற்படுகிறது. எனவே இங்கேயே பிரதேச பரிசோதனை செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை மருத்துவத்துறை நிர்வாகம் செய்து தர வேண்டும்.
மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி புரியும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் வசதிக்காக 1972ல் கட்டப்பட்ட மருத்துவ பணியாளர்கள் குடியிருப்பு அரை நூற்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட நிலையில் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறது. எனவே மருத்துவ பணியாளர்கள் இங்கேயே தங்கி பணிபுரியும் வண்ணம் குடியிருப்பை சீரமைத்து பராமரிக்க வேண்டும். பாதுகாப்பு வசதிக்காக இரவு நேர பணிக்காக கண்காணிப்புகாவலர் நியமிக்க வேண்டும்’’ என்றார்.

