Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து 70 வயது மூதாட்டி சாகசம்: தாயின் ஸ்கை டைவிங் ஆசையை நிறைவேற்றிய மகன்

மூணாறு: எழுபது வயது தாயின் ஸ்கை டைவிங் ஆசையை நிறைவேற்றிய மகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், அடிமாலி அருகே உள்ள கொன்னத்தடி ஊராட்சியை சேர்ந்தவர் லீலா (70). இவரது மகன் துபாயில் பணிபுரிந்து வருகின்றார். இவர் ஓணம் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவரிடம், ஸ்கை டைவிங் செய்ய வேண்டுமென்ற ஆசை நீண்ட நாட்களாக இருப்பதாக தனது விருப்பத்தை தாய் லீலா பகிர்ந்துள்ளார்.

தனது தாயின் கனவை நிறைவேற்றும் விதமாக கடந்த வாரம் லீலாவை அவரது மகன் துபாய்க்கு அழைத்துச் சென்றார். பின்னர், ஒரு சிறிய விமானத்தில் இளம் சாகச வீரரின் உதவியுடன் சுமார் 13 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து லீலா கீழே குதித்து ஸ்கை டைவ் செய்து அசத்தினார். 70 வயதான லீலாவின் சாகசத்தை கண்ட அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளும், ஸ்கை டைவிங் குழுவினரும் ஆச்சரியமடைந்தனர். ஆகாயத்திலிருந்து நகரத்தின் காட்சிகளை ரசித்த படி லீலா பத்திரமாக தரையிறங்கினார்.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தாயின் ஆசையை நிறைவேற்றிய மகனுக்கும், 70 வயதில் சாதனை படைத்த லீலாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. லீலா கூறுகையில், ‘‘எனது மகன் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவு எனக்கு இரட்டிப்பு தைரியத்தை அளித்தது. அதனால் தான் ஆகாயத்தில் 13 ஆயிரம் அடி உயரத்திலிருந்து என்னால் குதிக்க முடிந்தது. இனி ​​இதற்கு மேல் அதிக உயரத்தில் இருந்து குதித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க வேண்டும் என்பதே எனது கனவு. கனவை நிறைவேற்ற வயது ஒரு தடை இல்லை என்பதற்கு இது ஒரு சான்று’’ என்றார்.