பெட்ரோல் விலை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. இவற்றுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் கார்கள் வாங்கினாலும், நீண்ட தூர பயணத்துக்கு ஏற்றதாக பெட்ரோல், டீசல் கார்கள் தான் உள்ளன. எனவே, அதிக மைலேஜ் வழங்கும் கார்களையே மக்கள் தேர்வு செய்கின்றனர். இந்நிலையில், 7 சீட்டர் கார்களில், அராய் சான்றிதழ் அடிப்படையில் அதிக மைலேஜ் வழங்கும் கார்கள் விவரம் வருமாறு:
எம்ஜி ஹெக்டார் பிளஸ்
எம்ஜி ஹெக்டார் நிறுவனத்தின் ஹெக்டார் பிளஸ் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 143 எச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் தேர்வுகளில் உள்ளன. இந்நிலையில், ஹெக்டார் பிளஸ் சிவிடி கார் ஒரு லிட்டருக்கு 12.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் நிறுவனம் சான்றளித்துள்ளது. இந்த எஸ்யுவி காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.17.35 லட்சம்.
மாருதி எர்டிகா
மாருதி சுசூகி நிறுவனத்தின் பிரபலமான கார்களில் ஒன்றான எர்டிகாவில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 5 ஸ்பீடு மேனுல் கியர் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 103 எச்பி பவரை வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டார்க்யூ கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்டும் உள்ளது. எர்ட்டிகா ஆட்டோமேட்டிக் 20.3 கிலோமீட்டர் மற்றும் மேனுவல் 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது.
கியா கேரன் கிளாவிஸ்
கியா கேரன்ஸ் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் எம்பிவி கார்களில் 1.5 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. இது அதிகபட்சமாக 115 எச்பி பவரை வெளிப்படுத்தும். இது லிட்டருக்கு 15.34 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. இதுபோல், கேரன்ஸ் கிளாவிஸ் காரில் 150 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது லிட்டருக்கு 15.95 மைலேஜ் வழங்கும் எனவும், இந்த காரின் டிசிடி வேரியண்ட் 16.66 மைலேஜ் வழங்கும் எனவும் அராய் சான்றளித்துள்ளது.
ரெனால்ட் டிரைபர்
ரெனால்ட் டிரைபர் பேஸ்லிப்ட் 2 மாதம் முன்புதான் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 72 எச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 5 ஸ்பீடு ஏஎம்டி மேனுவல் டிரான்ஸ்மிஷன் இடம் பெற்றுள்ளது. டிரைபர் ஏஎம்டி 19.59 கிலோமீட்டர் மைலேஜ் மற்றும் மேனுவல் வேரியண்ட் 19.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது.
டொயோட்டா ரூமியான்
டொயோட்டா நிறுவனத்தின் ரூமியான் கார், சுசூகி எர்டிகாவின் இன்ஜின் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கியது. இருப்பினும் மாருதி மற்றும் ரூமியான் இடையே மைலேஜ் வேறுபடுகிறது. மேனுவல் வேரியண்ட் 20.51 கிலோ மீட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் 20.3 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என அராய் சான்று வழங்கியுள்ளது.