Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

6,746 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1,146 கோடியில் மறு கட்டுமானம்: 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை, தஞ்சாவூர், திருச்சியில் ரூ.1,146 கோடியில் 6,746 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டசபை நேற்று மாலை கூடியதும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: சென்னை மற்றும் இதர நகரங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் பல ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சில நீண்டகாலப் பயன்பாடு மற்றும் தட்பவெப்பநிலை காரணமாக சிதிலமடைந்துள்ளன. இந்தக் குடியிருப்புகளை முறையாகக் கணக்கெடுத்து, அவற்றை மறுகட்டுமானம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுகட்டுமானத்திற்குப் பின் இக்குடியிருப்புகள், புதுமையான, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் பழைய குடியிருப்புகளில் முன்னர் வாழ்ந்த குடும்பங்களுக்கும், இதே திட்டப் பகுதிகளின் அருகில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடிக் குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள், 28 ஆயிரத்து 643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.

இதன் முதற்கட்டமாக, 2024-2025-ம் ஆண்டில், சென்னை மாநகரில் கிழக்கு கல்லறை சாலை, கொடுங்கையூர், வ.உ.சி. நகர் போன்ற திட்டப்பகுதிகள், தஞ்சாவூரில் ஏ.வி.பதி நகர் திட்டப்பகுதி மற்றும் திருச்சியில் கோட்டக்கொல்லை திட்டப்பகுதி ஆகியவற்றில் உள்ள 6 ஆயிரத்து 746 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ரூ.1,146 கோடி மதிப்பீட்டில் மறுகட்டுமானமும் மற்றும் புதிய திட்டப்பகுதிகளில் கட்டுமானமும் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர் தா.மோ.அன்பரசன், உறுப்பினர்கள் வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), அப்துல் சமது (மனிதநேய மக்கள் கட்சி), கு.சின்னப்பா (ம.தி.மு.க.), தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), நாகை மாலி (மார்க்சிஸ்ட்), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி), சிந்தனை செல்வன் (விசிக), நயினார் நாகேந்திரன் (பா.ஜ), ஜி.கே.மணி (பா.ம.க.), ராஜேஷ்குமார் (காங்கிரஸ்) ஆகியோர் நன்றி தெரிவித்து பேசினர்.