ரூ.100 கோடி செலவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோயில்கள் புனரமைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: ரூ.100 கோடி செலவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோயில்களின் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 3,297 கோயில்களில் குடமுழுக்கு, தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புனரமைத்தல், புதிய தேர்கள் உருவாக்கம் மற்றும் தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதான திட்டம் விரிவாக்கம், மலை கோயில்கள் மற்றும் முக்கிய கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், திருச்சி பஞ்சநதீஸ்வரர் கோயில், அளுந்தூர் காசி விஸ்வநாத சுவாமி கோயில், தஞ்சாவூர் பரிதியப்பர் கோயில், கடலூர் மாவட்டம், திருமூலஸ்தாணம், கைலாசநாதர் கோயில், ராஜேந்திர சோழகன், தோளீஸ்வரர் கோயில், திருவட்டத்துறை, தீர்த்தபுரீஸ்வரர் கோயில், திருவேட்களம், பாசுபதீஸ்வரர் கோயில், வேலூர் மாவட்டம், அன்பூண்டி, திருத்தாளீஸ்வரர் கோயில், திருவலம், வில்வநாதீஸ்வரர் கோயில், ராணிப்பேட்டை மாவட்டம், பள்ளூர், திருக்குகேஸ்வரர் கோயில், பெருங்காஞ்சி, அகத்தீஸ்வரர் கோயில், காவேரிப்பாக்கம், அபயவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 63 கோயில்களை ரூ.100 கோடியில் அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் நமது கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் காலப் பெட்டகங்களாக திகழும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில்களின் தொன்மை மற்றும் கட்டிடக் கலை போன்றவற்றை வருங்கால தலைமுறையினரும் அறிந்து கொள்ள பேருதவியாக அமையும். இந்நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், அறநிலைய துறை செயலாளர் மணிவாசன், ஆணையர் ஸ்ரீதர், ஆணையர் பழனி, தலைமைப் பொறியாளர் பெரியசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக காஞ்சிபுரத்திலிருந்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலரசன், சுந்தர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.