சண்டிகர்: விமான படையில் 62 ஆண்டு சேவைக்கு பின் மிக்-21 போர் விமானங்களுக்கு நேற்று ஓய்வு அளிக்கப்பட்டது. சோவியத் யூனியனில் மிகோயன்-குரேவிச் வடிவமைப்பகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சூப்பர்சோனிக் ஜெட் போர் விமானம் மிக்-21. இவை இடைமறிப்பு விமானங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்திய விமானப்படையில் 1963ம் ஆண்டு மிக் விமானங்கள் சேர்க்கப்பட்டன. 62 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தியாவின் வான் பாதுகாப்புக்கு முதுகெலும்பாக இருந்து வந்தவை மிக்-21 விமானங்கள்.
கடந்த 1965, 1971ம் ஆண்டுகளில் பாகிஸ்தான் போர், 1999ம் ஆண்டு கார்கில் போர் மற்றும் 2019ல் பாலகோட் வான்வழித் தாக்குதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் மிக்-21 விமானங்களின் பங்கு முக்கியமானதாகும்.
மிக்-21 விமானங்கள் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்ததால், அதன் பழைய தொழில்நுட்பம் மற்றும் உதிரிபாகங்களின் பற்றாக்குறை காரணமாக விபத்துகளில் சிக்கின. 60 ஆண்டுகளில் 293 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. 200 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். விமான படையில் பல போர்களில் சிறந்த முறையில் செயல்பட்ட மிக்-21 விமானங்கள் 62 ஆண்டுகால சேவைக்கு பின் நேற்று ஓய்வு பெற்றன.
சண்டிகர், விமானப்படைத் தளத்தில் பிரமாண்டமான விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஏ.பி. சிங், ராணுவ உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,‘‘ மிக் -21 நமது நாட்டின் நினைவுகளிலும், உணர்வுகளிலும் ஆழமாக பதிந்துள்ளது. மிக் 21 முதல்முறையாக நம்முடன் இணைந்தது முதல், இன்று வரையான 62 ஆண்டுகளுக்கும் மேலான இந்த பயணம் இணையற்றது.நம்மில் பலருக்கு இது ஒரு போர் விமானம் மட்டுமல்ல, மாறாக ஒரு குடும்ப உறுப்பினர் போன்றது.இது விமானம் இல்லை,இந்திய - ரஷ்யா உறவுகளுக்கான சாட்சி’’ என்றார்.